ஆம்பூர் தொகுதியை கைப்பற்ற பா.ஜனதா வேட்பாளராக வெங்கடேசன் களமிறக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.
அந்த பட்டியலில், வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் தொகுதிக்கு கோ.வெங்கடேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வெங்கடேசன் பா.ஜனதா கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட தலைவராக உள்ளார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இருமுறை பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இருமுறையும் அவர் தோல்வியடைந்தார். இதனால் கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதிக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரும் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா தலைமையில் அங்கம் வகித்த தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் விலகிவிட்டது.
இதனால் பா. ஜனதாவிற்கு இந்த தேர்தல் கடும் சவாலாக மாறியுள்ளது. தேர்தலை தனித்து சந்திக்க போவதாகவும் அக்கட்சி கூறி வருகிறது. அதற்காக, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
சவாலாக விளங்கும் தொகுதிக்கு முக்கிய நிர்வாகிகளை வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. பா.ஜனதாவுக்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதியில் பெரும் சவாலாக இருப்பது ஆம்பூர் தொகுதியாகும்.
அந்த தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்ட போதுதான், மீண்டும் வெங்கடேசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், வெங்கடேசன் மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினராக 2 முறை இருந்துள்ளார். மேலும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார்.
54 வயதான வெங்கடேசன் ஏற்கனவே இருமுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டதால், வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
இதன் காரணமாகவே அவர், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வெங்கடேசன் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே பா.ஜனதாவில் ஆம்பூரில் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
கடந்த 2 வாரமாக வெங்கடேசனை முன்னிறுத்தி அவர்கள் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரத்தில் புதிய வியூகங்களை பயன்படுத்தி வெங்கடேசனை வெற்றி பெற செய்வோம் என்று கட்சியினர் கூறினர்.
No comments
Thank you for your comments