விஜயகாந்துக்கு முதல்வர் ஆகும் தகுதி இல்லை என்றால் வேறுயாருக்கு இருக்கிறது? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
விஜயகாந்துக்கு முதல்வர் ஆகும் தகுதி இல்லை என்றால் இந்த தமிழ்நாட்டில் வேறுயாருக்கு இருக்கிறது? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை ஒபுளாபடித் துறையில் தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கை பொதுக்கூட்டம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில், மதுரையில்தான் தே.மு.தி.க. தொடங்கப்பட்டது.
பலமுறை தேர்தலை சந்தித்துள்ள தேமுதிக, தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது. தே.மு.தி.க.–மக்கள் நலக்கூட்டணி இணைந்த கேப்டன் அணியை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். இப்போது அ.தி.மு.க–தி.மு.க. பற்றி அதிகமாக விமர்சிப்பது இல்லை. தே.மு.தி.க. பற்றிதான் விவாதம் நடக்கிறது.
எங்கள் கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தை சிறந்த மாநிலமாக விஜயகாந்த் மாற்றி காட்டுவார். பழம் நழுவி பாலில் விழும் என்று கருணாநிதி கூறினார். நஞ்சு பாலில் பழம் விழக்கூடாது என்று வைகோ கூறினார். நாங்கள் கூட்டணி சேர்ந்ததும் பழம் கனிந்து பாழாகிவிட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். ஆனால் பழம் நழுவி தேனில்தான் விழுந்துள்ளது. இந்த பழம் ஞானப் பழம். ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் பழம்.
லஞ்ச ஊழல் இல்லாத மாற்று அரசியலை கொண்டுவர உறுதிபூண்டுள்ளோம். விஜயகாந்துக்கு ஒட்டுமொத்த ஆதரவு இருக்கிறது. இவருக்கு முதல்வர் ஆகும் தகுதி இல்லை என்றால் இந்த தமிழ்நாட்டில் வேறுயாருக்கு இருக்கிறது?
இதுவரை அய்யாவுக்கு ஓட்டு போட்டீர்கள். அம்மாவுக்கு ஓட்டு போட்டீர்கள். இந்த முறை உங்கள் அண்ணனுக்கு ஓட்டு போடுங்கள். லஞ்சம் ஊழல் இல்லாத மக்கள் ஆட்சி மலரும்.
எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது. 5 விரல்கள்போல் ஒற்றுமையாக இருக்கிறோம். எனவே, எதிர்க்கட்சிகாரர்களின் கனவு பலிக்காது என பேசியுள்ளார்.
No comments
Thank you for your comments