Breaking News

தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டி: சாதனை படைத்த சென்னைச் சிறுமி

சென்னை, மார்ச் 21-
பிரேசிலில் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், சென்னையைச் சேர்ந்த சிறுமி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த 'ஸ்ட்ரீட் சைல்டு யுனைடெட்' என்ற நிறுவனம், பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கான மினி ஒலிம்பிக் போட்டியை நடத்தியது.

இந்தப் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜன்டினா, எகிப்து, மொசாம்பிக், பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த தெருவோரக் குழந்தைகள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டிக்குச் செல்லும் கடைசி நிமிடம் வரை பாஸ்போர்ட் கிடைக்காமல் தவித்து வந்தார் சென்னையைச் சேர்ந்த ஹெப்சிபா.

ஏனெனில் அவருக்கு தெளிவான முகவரி இல்லை. சென்னை, ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள அல்லிகுளத்தின் தெருவோர குடிசையில் நீண்டகாலம் இவரது குடும்பம் வசித்து வந்தது.

இதன்பிறகு, ஆக்ரமிப்புகளை அப்புறப்படுத்தியதால் வீடற்ற விடுதியில் தங்கியிருந்தார் ஹெப்சிபா.

ஹெப்சிபா கூறுகையில், முதலில் எனக்கு பிரேசில் போக வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகமாக இருந்தது.

பணமும் இல்லை. கருணாலயா அமைப்பு தான் உதவி செய்தார்கள். இப்ப டவுட்டன் கவர்மெண்ட் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

பிரேசில் ஒலிம்பிக் போட்டியில், 100 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்க மெடல், 100 மீ தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம், 400 மீ ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம், 400 மீ தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம் என நான்கு பதக்கங்களை ஹெப்சிபா அள்ளியுள்ளார்.

மேலும், சிறுவயதிலேயே பெற்றோரின் செயல்பாட்டால், வீட்டை விட்டு ஓடிவந்த தர்மபுரி, சுங்கரஹள்ளி பகுதியைச் சேர்ந்த அசோக், குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வாங்கியுள்ளார்.

இவர்களைப் போல, ஃபாரெக்ஸ் ரோடு உஷா, சூளை சிலம்பரசன், பீச் ஸ்டேசன் சினேகா என மொத்தம் ஐந்து பேர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்றனர்.

மற்ற மூவருக்கும் பங்கேற்பு சான்றிதழை வழங்கியுள்ளது போட்டியை நடத்தும் நிறுவனம்.

கருணாலயா என்ற அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் பால் சுந்தர் சிங் கூறுகையில், இந்த ஐந்து சிறுவர்களுக்கும் பயணச் செலவாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் ஆனது.

நாங்கள் சிரமப்படுவதைப் பார்த்ததும் நான்கு பேருக்கான கட்டணச் செலவை ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லண்டன் அமைப்பே ஏற்றுக் கொண்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்தப் போட்டியில் பங்கேற்பதே நமக்கான வெற்றிதான். ஏனென்றால், போதிய அளவில் பயிற்சியை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தச் சிறுவர்களுக்கு நேரு ஸ்டேடியத்தில் பயிற்சியெடுக்க அனுமதி கிடைத்தது.

எல்லாவற்றையும் தாண்டி ஐந்து பதக்கங்களோடு சென்னை திரும்புவோம் என நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை.

தமிழ்நாடு முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோரக் குழந்தைகள் வசிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments