Breaking News

99 மீனவர்களையும் 83 படகுகளையும் மீட்க வலியுறுத்தி முதல்வர் ஜெ. பிரதமர் மோடிக்கு கடிதம்

சென்னை, மார்ச் 25-
இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் உட்பட அந்நாட்டில் உள்ள 99 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 83 படகுகளையும் மீட்க வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நீண்ட கால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இந்திய அரசு தகுந்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 



முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை, இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு அந்நாட்டு கடற்படையினர் பிடித்துச் சென்ற மற்றொரு சம்பவம் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவர இக்கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார். 



தாம் பலமுறை வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடற்பகுதியில் அமைதியான முறையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, காவலில் வைப்பது போன்ற செயல்களை நிறுத்திக்கொள்ளும்படி இலங்கை அதிகாரிகளுக்கு, இந்திய அரசு அழுத்தம் கொடுக்கவில்லை என்பது தமக்கு கவலை அளிப்பதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வருத்தம் தெரிவித்துள்ளார். 



1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அரசியல் சட்ட செல்லத்தக்கத் தன்மை தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடனும், சட்டப்பூர்வ அடிப்படையிலும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்து பாக் நீரிணையில் நமது மீனவர்களுக்கு உள்ள பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை கடுமையாக வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். 



இந்திய மீனவர்களுக்கும், இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண கச்சதீவை திரும்பப் பெறவும், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலைநாட்டவும், இந்திய அரசு தக்க அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் பிடிபட்ட ஒரு இயந்திரப் படகு உட்பட 83 மீன்பிடி படகுகள் இப்போதும் இலங்கையின் வசம் உள்ளன- நீண்டகாலமாக இந்த படகுகள் பராமரிப்பின்றி பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாலும், மோசமான பருவநிலை காரணமாகவும், சீரமைக்கப்பட முடியாத அளவிற்கு இந்தப் படகுகள் சேதமடைந்திருக்கும் - இதேபோன்று மீன்பிடி உபகரணங்களும் பழுதடைந்திருக்கும் - எனவே இந்த மீன்பிடி படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் விரைவில் புதுப்பித்து அவற்றை மீனவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தாம் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 



இந்த உணர்வுப்பூர்வமான பிரச்னையை சமாளிக்க இந்திய அரசின் நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படுவதும், தற்போதைய தேவையும் ஆகும் - நேற்று முன்தினம் பிடித்துச் செல்லப்பட்ட 3 மீனவர்கள் மற்றும் அவர்களின் இயந்திரப் படகு உட்பட இலங்கையில் உள்ள 99 மீனவர்களையும், 83 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரகம் மூலமாக திட்டவட்டமான நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Thank you for your comments