Breaking News

திருச்சி அருகே பயங்கர விபத்து: 4 பெண்கள் உள்பட 5 பேர் சாவு

5 Dead, 20 Injured in Trichy Road Accidentதிருச்சி, மார்ச் 11-
திருச்சி அருகே நேற்று கல்லூரிப் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (60). இவர், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது உறவினர்கள் சிலருடன் நாகை மாவட்டம், திருக்கடையூர் கோயிலுக்கு வியாழக்கிழமை அதிகாலை ஒரு வேனில் புறப்பட்டார். வேனை சேலத்தை சேர்ந்த சு. ராமராஜ் ஓட்டியுள்ளார்.

காலை 8 மணிக்கு திருச்சி மாவட்டம், வாத்தலையை அடுத்த குணசீலம் மஞ்சக்கோரை பகுதியில் அந்த வேன் சென்றபோது, முன்னால் சேலத்தில் இருந்து நாகூர் நோக்கி சென்றுகொண்டிருந்த காரை முந்தி செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. இதில் வேனில் இருந்த மகேஷ்வரி, தாரணி (45), ஷீலா (55), மற்றொரு மகேஷ்வரி (40) மற்றும் டிரைவர் ராமராஜன் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் வேனில் இருந்த குழந்தை ஸ்வர்ஷா உள்பட 8 பேரும், பேருந்தில் இருந்த 4 பேரும், காரில் பயணித்த 8 பேரும் என மொத்தம் 20 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து காரணமாக திருச்சி-சேலம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments