கர்நாடக முதல்வர் பட்ஜெட் வாசித்தபோது 2 முறை தடைபட்ட மின்சாரம்! அதிர்ச்சியில் அதிகாரிகள்
பெங்களூர், மார்ச் 18-
கர்நாடக பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்கு
ரூ.222 கோடியும், பெங்களூர் நகர வளர்ச்சிக்கு ரூ.6046 கோடியும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் 2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் இன்று
முதல்வரும், நிதித்துறை பொறுப்பை வகிப்பவருமான சித்தராமையா தாக்கல்
செய்தார்.
அதில் பெங்களூர் நகர வளர்ச்சி குறித்து கூறியதாவது: நகரில் 51.65
கி.மீ தூரத்திற்கு 4 காரிடார் சாலைகள் சிக்னல் அற்ற சாலைகளாக மாற்றப்பட்டு
வருகிறது. இதற்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நகரின் மத்திய பகுதியில் 16.57 கி.மீ தூரத்திற்கு டெண்டர் சுயர் தர
மதிப்பீடு படி சாலை மேம்பாடு செய்யப்படுகிறது. இதற்கு ரூ.200 கோடி
ஒதுக்கீடு செய்யப்படும். ஐடி துறை வளர்ச்சிக்கு ரூ.222 கோடி ஒதுக்கீடு
செய்யப்படுகிறது.
நகரத்தில் மொத்தம் 300 கி.மீ நீள சாலைகள் சிமெண்ட் சாலைகளாக தரம்
உயர்த்தப்படும். புராதான மதிப்பு கொண்ட, ரசல் மார்க்கெட், ஜான்சன்
மார்க்கெட், கே.ஆர்.மார்க்கெட் மேம்படுத்தப்படும்.
ஒயிட்பீல்டு, பீன்யா தொழில்பேட்டை உள்ளிட்ட ஐடி-பிடி நிறுவனங்கள் குவிந்துள்ள பகுதிகள் மேம்படுத்தப்படும்.
கார் பார்க்கிங் பிரச்சினையை தவிர்க்க நகரின் சில பகுதிகளில்
அடுக்குமாடி பார்க்கிங் நிறுத்தங்கள் கட்டப்படும். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இதனிடையே சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, சட்டசபையில்
இருமுறை மின்சாரம் தடைபட்டது. இருமுறையும் தலா 5 நிமிடங்கள் மின்சாரம்
தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சாரம் தடைபட்டபோது சித்தராமையா நின்றபடியே விளக்கு வெளிச்சம்
வரும் வரை காத்திருந்தார். கர்நாடகாவில் கடுமையான மின்வெட்டு நிலவும் இந்த
சூழ்நிலையில், சட்டசபையில் மின்சாரம் தடைபட்டுள்ளது. ஜெனரேட்டர் போன்ற
வசதிகள் இருந்தும் இதுபோல மின்சாரம் தடைபட சதி வேலை காரணமாக இருக்கலாம்
என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
No comments
Thank you for your comments