Breaking News

உங்கள் தாயை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பீர்களா? உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி, பிப்.13:
'ஆன்மீகம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா?' என்று சபரிமலையில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி அளிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளது. 


சபரிமலையில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி அளிப்பதன் மீதான தடை விவகார வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது, வேதங்கள், வேதசாரமாகிய உபநிடதங்கள், மற்றும் புனித நூல்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகுபாடு கற்பிக்காத நிலையில் எங்கிருந்து வருகிறது இந்தப் பாகுபாடு என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், ஆன்மீகம் முழுதும் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா? மதம் என்ற புலத்தில் பெண்கள் ஆன்மிக நிலையை அடைய லாயக்கற்றவர்களா? என்றும் உங்கள் தாயை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பீர்களா? எனவும் நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்ட மாணவர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிடுகையில், பெண் பிரம்மச்சாரிகளும் இந்த உலகத்தில் உள்ளனர்.
அனைத்து ஆசைகளையும் துறந்து வாழ்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. நமது அரசியல் சாசன சட்டப்பிரிவு 25 என்ன கூறுகிறது என்றால், அனைத்து மனித இனத்துக்கும் பொதுவான மத ஸ்தலங்களை திறந்து விடுங்கள் என்கிறது.

நாங்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று கூற வருகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநில அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் வி.கிரி கூறுகையில், சபரிமலைக்கு ஒரு வீட்டில் ஒரு ஆண் மாலையிட்டுக் கொள்கிறார் என்றால், பெண்கள், குழந்தைகள் உட்பட அவரை அவரது குடும்பமே ஆதரிக்கிறது என்றும், நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தத் தடை பக்தர்கள் மனதில் உட்பொதிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நீதிபதி மிஸ்ரா, அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படை உரிமையான சமத்துவம் என்பதை மீறி இந்த தடை மரபு நீடித்து நிலைக்கப் போகிறதா?

வேதங்களிலும், உபநிடதங்களிலும் பெண்/ஆண் பாகுபாடு இல்லையெனும் போது, வரலாற்றில் எந்த காலக்கட்டத்தில் இந்தப் பாகுபாடு தொடங்கியது என்று கூறுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தடைக்கு ஆதரவான ஆயிரமாண்டு கால நிரூபணத்தை 6 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments