தீவிரவாதிகளுக்கு உதவ இந்திய ராணுவத்தில் ஆள் பிடிக்க முயன்றோம்: ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
புனே ராணுவ மையத்தில் இருந்து தீவிரவாதிகளுக்கு உதவக்கூடிய
வீரர்களை தேடினோம் என்று தீவிரவாதி டேவிட் ஹெட்லி வாக்குமூலம்
அளித்துள்ளார்.
மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 2008ம் ஆண்டு
நவம்பர் மாதம் கொடூரத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதல் சதிகாரர்களுடன்
தொடர்புடைய லஷ்கர் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி தற்போது அமெரிக்கச் சிறையில்
35 ஆண்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் அவர் தற்போது அப்ரூவராக
மாறியுள்ளார். இவ்வழக்கில், அமெரிக்காவில் இருந்தபடி மும்பை நீதிமன்றத்தில்
வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து
வாக்குமூலம் அளித்து வருகிறார்.
இன்று 5வது நாளாக ஹெட்லி அளித்த வாக்குமூலத்தில் இருந்து சில முக்கிய
தகவல்கள் இதோ: மும்பை தாக்குதலுக்கு பிறகும் நான் அச்சமின்றி, இந்தியா
வந்தேன். 2009ம் ஆண்டு மார்ச் 11 முதல் 13ம் தேதிவரை ராஜஸ்தான் மாநிலத்தில்
சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அப்போது அங்குள்ள நகரங்களை வீடியோவாக ஷூட்
செய்துகொண்டேன்.
2009ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி, புனேவுக்கு சென்றேன். அங்குள்ள சூர்ய
வில்லா ஹோட்டலில் தங்கியிருந்தேன். புனேயில் இந்திய ராணுவ பயிற்சி
இடத்திற்கு சென்றிருந்தேன். மேஜர் இக்பால் என்னை அங்கு வரச் செய்தார்.
இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்களை எங்கள் திட்டத்திற்கு உடந்தையாக்கும்
வகையில் ராணுவத்தில் இருந்து ஆள் சேர்ப்பில் ஈடுபட முடிவு செய்தோம்.
ராணுவ பயிற்சியகம், புனே நகரம் போன்றவற்றை வீடியோவாக
எடுத்துக்கொண்டேன். ஹபீஸ் சையது மற்றும் லக்வி ஆகியோரிடம் பாகிஸ்தான்
விசாரணை நடத்துவதாக அறிந்து, சஜித் மிர்ரிடம் (பாக்.கிலுள்ள லஷ்கர்
பயங்கரவாதி) கேள்வி எழுப்பினேன். ஆனால் அவரோ, ஹபீசுக்கும், லக்விக்கும்
எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார்.
ஹபீசை நாங்கள் பழைய அங்கிள் என்றுதான் அழைப்பது வழக்கம். 2009 ஆகஸ்ட்
28ம் தேதி, மிர்ருக்கு மீண்டும் மெயில் அனுப்பினேன். அப்போது அங்கிள்
(ஹபீ்ஸ் சையது) எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். அவருக்கு ஹெச்1என்1
(பன்றிக்காய்ச்சல்) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், டாக்டர்
சிகிச்சையளிப்பதாகவும், மிர் தெரிவித்தார்.
மும்பை குண்டு வெடிப்பு பற்றி பாகிஸ்தான் அவரிடம் விசாரிக்கிறதா என்று
கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை. பாகிஸ்தானில் அவர் சுதந்திரமாக
வாழ்கிறார் என்று மிர் எனக்கு பதில் அனுப்பினார்.
மும்பையில் சிவசேனை கட்சி தலைமை அலுவலகத்தை தகர்க்கவும், பால்தாக்ரேவை
(தற்போது மறைந்துவிட்டார்) கொலை செய்யவும், திட்டமிட்டிருந்தேன். இதற்காக,
உத்தவ் தாக்ரேவின் செய்தித்தொடர்பாளர் ராஜாராம் ரெகேவுடன், இ-மெயிலில்
அவ்வப்போது தொடர்பு கொண்டுள்ளேன்.
அமெரிக்காவில் இருந்தபடியும், பாகிஸ்தானில் இருந்தபடியும், அவருக்கு
மெயில் அனுப்பியுள்ளேன். அவரை எங்கள் திட்டத்திற்கு பயன்படுத்த முடியுமா
என்று முயற்சி செய்து பார்த்தோம். இவ்வாறு ஹெட்லி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments