Breaking News

ஜாட் வன்முறையால் குடிநீர்த் தட்டுப்பாடு... டெல்லியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

டெல்லி, பிப்.22:
ஹரியானாவில் நடைபெற்று வரும் ஜாட் இனத்தவரின் போராட்டத்தால் டெல்லியில் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இன்று அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் கணிசமாக வாழ்ந்து வரும் ஜாட்
இன மக்கள், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாநில அரசின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி கடந்த 15-ந்தேதி முதல் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 19ம் தேதி முதல் இவர்களது போராட்டம் தீவிரமடைந்தது. ரோட்டக், ஜாஜார், பிவானி, சார், ஜிந்த், கைதால், குர்கான் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் சாலைகளை ஆக்கிரமித்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

10 பேர் பலி
சில இடங்களில் போராட்டம் கலவரமாக வெடித்தது. கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 150 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

வழக்குப்பதிவு
மாநில அரசின் வேண்டுகோளை அடுத்து பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 191 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

முனாக் கால்வாய்
இந்நிலையில் டெல்லியின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் முனாக் கால்வாயை, சோனிபட் அருகே உள்ள அக்பர்பூர் பரோட்டா பகுதியில் போராட்டக்காரர்கள் அடைத்துள்ளனர். இதனால் தலைநகர் டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

குடிநீர்த்தட்டுப்பாடு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ராணுவப் பாதுகாப்புடன் விரைந்து சென்ற குடிநீர் வாரிய தொழில்நுட்ப அதிகாரிகள், கால்வாய் அடைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது உடனே சரி செய்யப்பட்டால் கூட டெல்லியில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு 60 சதவீத குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.

ரேஷன் முறையில் குடிநீர்
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, குடியரசுத்தலைவர், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களைத் தவிர, பிற பகுதிகளில் ரேஷன் முறையில் குடிநீர் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கெஜ்ரிவால் வேண்டுகோள்
பொதுமக்கள் முடிந்த அளவுக்கு தண்ணீரை வீணாக்காமல் சேமித்து வைக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலத்துக்கு தண்ணீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் மற்றும் ஹரியானா முதலமைச்சருக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவசர ஆலோசனை
இந்த தண்ணீர் நெருக்கடி தொடர்பாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் கெஜ்ரிவால். அதன் தொடர்ச்சியாக குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வழக்கு
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு டெல்லியில் குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த வேண்டும் என டெல்லி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டது நீதிமன்றம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

ரயில் போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே போராட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் தண்டவாளங்களைச் சேதப்படுத்தியதால், ஹரியானாவிற்கு வந்து செல்லும் சுமார் ஆயிரம் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

No comments

Thank you for your comments