Breaking News

"கள்ளக்குறிச்சி எம்எல்ஏவைக் கைது செய்து வழக்கை சிபிஐக்கு மாற்றுக; முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்!" - ஆளுநரைச் சந்தித்த பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

 சென்னை | நவம்பர் 26, 2026

மாவட்ட ஆட்சியருக்குக் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் வழக்கில் அவரை உடனடியாகக் கைது செய்யவும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தக் கோரி, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 26) புகார் மனு அளித்துள்ளார்.

“116 நாட்களாகக் குற்றத்தை மறைக்க முயற்சி; முதல்வர் & தலைமைச் செயலாளரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும்!” - உதயநிதி ஸ்டாலின்

"தவெக ஆட்சியில் நடைபெற்று வரும் குற்றங்களைத் தடுக்கத் தவறியதற்காக இந்த அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் விஜய் நேரில் வந்து மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும்" என ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த விரிவான குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள்:

“பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்; அதோடு, இதில் சம்பந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆளுநரிடம் புகார் மனு அளித்திருந்தோம்.

தமிழகத்தில் இந்தப் புதிய ஆட்சி அமைந்து கடந்த ஆறு மாதங்களாக, நடக்கக்கூடிய அனைத்து குற்றச் சம்பவங்கள், குறிப்பாகப் பாலியல் வன்முறைச் சம்பவங்கள், 80 சதவீதத்துக்கும் மேல் ஆளுங்கட்சியினர்தான், குறிப்பாக ஆளுங்கட்சிப் பொறுப்பில் இருக்கிறவர்களும், நிர்வாகிகளும்தான் இதில் ஈடுபடுகிறார்கள், குற்றவாளிகளாக இருக்கிறார்கள். எனவே, இந்த அரசின் மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகு-கேது பெயர்ச்சி 
[2026 to 2028] 

18 மாதம்- யாருக்கு ராஜயோகம்?

👑 எந்த ராசிக்கு நினைத்தது நிறைவேறும்?

இந்த 4 ராசிக்கு அதிர்ஷடம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 

இன்றைக்கு ஆளுநரைச் சந்தித்து ஒரு புகார் மனுவை வழங்கியுள்ளோம். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக நேற்று புகார் கொடுத்த பிறகு, அப்போதாவது முதல்வர் தூக்கத்திலிருந்து எழுந்து, உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அறிந்து, குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்வார் என நினைத்தோம்.

டி.ஜி.பி அலுவலகத்துக்கு வெளியே நான் அளித்த பேட்டியை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார்கள். இதன்மூலம் என்ன புலப்படுகிறது என்றால், உறங்கிக்கொண்டிருக்கும் இந்த முதல்வர் இன்னும் விழித்தெழவில்லை. இந்த டம்மி முதல்வர் இன்னும் திருந்தவே இல்லை. இன்னமும் அவர் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், குற்றவாளிகளின் பக்கத்தில் சொகுசாகப் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார்

இன்னும் சொல்லப்போனால், சட்டம் - ஒழுங்கு, பொதுத்துறை - ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நலன் சார்ந்த இலாகாவும், இப்போதிருக்கும் பெயரளவிலான முதல்வரின் கீழ்தான் உள்ளது. அவரே அதற்குப் பொறுப்பு அமைச்சர். இந்த முதல்வர் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் துணை நிற்பதாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலும்தான் தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் பெருமளவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன


இவற்றையெல்லாம் எடுத்துரைப்பதற்காகத்தான் இன்று ஆளுநரைச் சந்தித்திருக்கிறோம். முக்கியமாக ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். கள்ளக்குறிச்சி வழக்கில் எங்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை; இதை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறோம்.

ஏனெனில், 116 நாட்களாக இந்தக் குற்றத்தை மறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசும், தலைமைச் செயலாளரும், முதல்வரும் மேற்கொண்டுள்ளனர்.

ஜூலை 31-ஆம் தேதியே மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துவிட்டார். எனவே, தலைமைச் செயலாளருக்கு அனைத்தும் தெரியும். இருந்தும், தலைமைச் செயலாளர் ஏன் இதை மூடி மறைத்தார்? இதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றாரா, இல்லையா? கொண்டு செல்லவில்லை என்றால் அது தலைமைச் செயலாளரின் தவறு. கொண்டு சென்றும் முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

எனவே, இந்தக் குற்றத்துக்கு முதல்வரும் உடந்தை. தலைமைச் செயலாளர் என்ன கூறியிருக்கிறார் என்றால், பேரம் பேசியிருக்கிறார். 'உங்களுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் நாம் இதைச் சரிசெய்து கொள்ளலாம். நீங்கள் வேறொரு மாவட்டத்துக்கு மாறிச் சென்றுவிடுங்கள்; மாற்றித் தருகிறேன்' என்று கூறியிருக்கிறார் என்றால், எப்படியாவது இந்தச் சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில்தான் தலைமைச் செயலாளர் ஈடுபட்டிருக்கிறார்.

அதனால் அவரைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நேற்று கூறியிருக்கிறோம். முதல்வரையும் இந்தக் குற்றத்தில் சேர்க்க வேண்டும்; அவரும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார். அதேபோல, கடந்த ஒரு மாத காலமாக இதுபோன்ற ஒரு நிகழ்வே நடைபெறவில்லை என்று தொடர்ந்து கூறிய மூன்று அமைச்சர்கள், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு & பெண்கள் பாதுகாப்பு குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

இந்த ஆட்சி அமைந்து ஆறு மாதங்களில் இதுவரை சுமார் 700 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அதுவும் குறிப்பாக ஆளுங்கட்சி நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பெருமளவில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் சொந்தக் கட்சியின் பெண் நிர்வாகியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன், ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். ஆலந்தூரில் வேம்புலி எனும் ஆளுங்கட்சிப் பகுதிச் செயலாளர் ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இப்படி பல நிகழ்வுகள்.

இவற்றையெல்லாம் சட்டமன்றத்தில், காவல் துறை மானியக் கோரிக்கையில் நான் பேசினேன். நான் மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளும் இக்கருத்துகளையெல்லாம் பேசியிருக்கின்றன.

ஆனால், இவற்றிற்கெல்லாம் முதல்வர் எவ்விதப் பதிலும் கூறவில்லை. இன்று ஒரு பெண் ஆட்சியருக்கு, பெண் ஆட்சியர் என்பதை விடுங்கள். நம் இல்லத்தில் நம் சகோதரிக்கோ, நமக்குத் தெரிந்தவர்களுக்கோ யாருக்காவது இப்படி யாரேனும் செய்தி அனுப்பினாலோ, இப்படி ஒரு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாலோ, நாம் சும்மா இருப்போமா?

ஆனால், இவற்றையெல்லாம் மீறி இன்று ஒரு உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் மாவட்ட ஆட்சித் தலைவருக்கே இந்த நிலையை இந்த அரசு ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளிகளை அழைத்துத் தண்டிப்பார், கடிந்து கொள்வார் என்று பார்த்தால், முதல்வர் என்ன செய்கிறார்? அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் வரவழைத்துத் தீபாவளி கொண்டாடிவிட்டு, அவர்களுக்கெல்லாம் தீபாவளிப் பரிசுப் பொருட்களை வழங்கியிருக்கிறார்.

மற்றொரு குற்றச்சாட்டு, இந்த ஆட்சி அமைந்த பிறகு பெண் குழந்தைகள் காணாமல் போவது நாள்தோறும் வரும் ஒரு செய்தியாக மாறிக்கொண்டிருக்கிறது. சென்ற மாதத்தில் மட்டும் 10 குழந்தைகள் இந்த ஆட்சியில் காணாமல் போயிருக்கிறார்கள்.

செஞ்சியில் ஒரு பெண் குழந்தை காணாமல் போய் இன்றோடு ஏறத்தாழ 45 நாட்கள் ஆகின்றன. நாங்கள் அனைவரும் எதிர்க்கட்சி, எல்லாரும் சேர்ந்து அந்தக் குழந்தையை விரைவாகக் கண்டுபிடியுங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைத்தோம்; காவல் துறையிடம் கோரிக்கை வைத்தோம்.

ஜோதிடர்களிடம் கேட்டு, காவல் நிலையத்தில் இன்று யாகம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்த ஆட்சியின் நிலைமை.

ஆறு மாதத்தில், இந்த ஆட்சி அமைந்த ஆறு மாதத்தில் ஒன்பது லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் கூட ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று அந்தச் செய்திகளையும் திரித்து இந்த அரசு பொய் சொல்லியிருக்கிறது.

இப்போது அந்த விவகாரத்தில் காவல்து றை மீது, காவலர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று நீதிமன்றம் இந்த அரசுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறது அதுமட்டுமல்ல, போதைப்பொருள் விவகாரத்தில் இந்த அரசு மிக மோசமான நிலையைக் கடைப்பிடித்து வருகிறது.

தவெக ஆட்சியில் நடைபெற்று வரும் குற்றங்களைத் தடுக்கத் தவறியதற்காக இந்த அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் விஜய் நேரில் வந்து மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


Short English Summary for Readers

Opposition Leader Udhayanidhi Stalin Meets Governor Arlekar, Demands CBI Probe in Kallakurichi MLA Case and Public Apology from CM Vijay

Chennai | November 26, 2026

Tamil Nadu Leader of the Opposition Udhayanidhi Stalin met Governor Rajendra Vishwanath Arlekar today and submitted a petition urging the arrest of Kallakurichi TVK MLA Arul Vignesh and the transfer of the harassment case involving the District Collector to the CBI. Addressing reporters afterward, Udhayanidhi alleged that the government and Chief Secretary attempted to suppress the complaint for 116 days and demanded they be named as co-accused. Raising concerns over law and order, alleged custodial deaths, and missing children over the past six months, he insisted that Chief Minister Vijay must publicly apologize to the people.

No comments

Thank you for your comments