Breaking News

“ஒருமுறை ஏமாந்துவிட்டீர்கள்; ரீல்ஸ் வெறியர்களுக்கு ரியாலிட்டி செக் கொடுங்கள்!” - மதுராந்தகத்தில் முதல்வர் விஜய்யை கடுமையாகத் தாக்கிய மு.க.ஸ்டாலின்!

 மதுராந்தகம் :

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்குரைஞர் இ. பரந்தாமனை ஆதரித்து, மதுராந்தகம் புறவழிச்சாலையில்  நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆவேசமாக உரையாற்றினார்.

தமிழகத்தில் ஆளும் தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசின் நிர்வாகச் சீர்கேடுகள், எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் மற்றும் விலைவாசி உயர்வைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட முக்கியப் பேச்சு விவரங்கள்:

“குதிரை பேரத்தால் திணிக்கப்பட்ட தேர்தல்!”

திணிக்கப்பட்ட தேர்தல்: 

"இந்தத் தேர்தல் வழக்கமான தேர்தல் இல்லை. பொதுமக்கள் மேல் திணிக்கப்பட்ட தேர்தல். நான்கு மாதங்களுக்கு முன்பு நீங்கள் ஒருவரை ஜெயிக்க வைத்தீர்கள். ஆனால் மெஜாரிட்டி இல்லாத இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக அவர் ராஜினாமா செய்துவிட்டு, திரும்ப வந்து வெட்கமே இல்லாமல் வேற சின்னத்தில் வாக்கு கேட்கிறார்."

5 ஆண்டு தோல்வி: 

"5 ஆண்டுகளாக அவர் எதுவும் செய்யவில்லை என்று அவரை வைத்துக்கொண்டே சொல்கிறார்கள். அதைச் சொல்லிவிட்டு அவருக்கே வாக்கு கேட்கிறார்கள். இதைவிட மதுராந்தகம் மக்களைக் கேவலப்படுத்த முடியுமா?"

வரலாற்றில் இல்லாத பேரங்கள்: 

"தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வந்த கையோடு ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா பண்ணுவது இதற்கு முன் நடந்திருக்கிறதா? அப்பட்டமாக நடந்த குதிரை பேரத்தால் தான் இந்தத் தேர்தல் நடக்கிறது. ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளை நம்பாமல், அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, மறுபடியும் அவர்களையே நிற்க வைத்து தவெகவின் சீட் கணக்கைக் கூட்டப் பார்க்கிறார்."

“இது தூய சக்தி ஆட்சி அல்ல; துயர சக்தி ஆட்சி!”

கூச்சமில்லாத ஆளும் அரசு: 

"சில நாட்களுக்கு முன்பு கூட 'உதயசூரியன் சின்னத்தில் களம் கண்ட இரண்டு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா பண்ணிட்டு வந்தால் அமைச்சர் ஆகியிருக்கலாம்' என்று ஆளும் அரசின் அமைச்சரே கூச்சமில்லாமல் மேடையில் பேசுகிறார். ஒரு பலவீனமான ஆட்சியை அமைத்திருக்கிற கட்சி, முடிந்தது வரை நல்லது செய்து மக்கள் மனதில் இடம்பெற வேண்டும். ஆனால் ஒரு மாதம் கூட தாங்கவில்லை; எம்.எல்.ஏ-க்களை வாங்குகிறார்கள், சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டது. இது தூய சக்தி ஆட்சி இல்லை, துயர சக்தி!"

 

விலைவாசி உயர்வு & ரீல்ஸ் மோகம்: 

"நேற்று முதல்வர் இங்கே சூட்டிங் எடுக்க வந்தாரே, அப்போது ஒரு சீனில் டீ குடிக்கிற ஷாட். அந்த டீயைக் குடித்துவிட்டு பந்தாவாக ரூ.500 கொடுத்தார். ஆனால் மக்கள் ஒரு டீக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியுமா? இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு டீ ரூ.10, இப்போது ரூ.15. மளிகைக் கடையில் அரிசி, சர்க்கரை, காய்கறி உட்பட எல்லா விலையும் ஏறிவிட்டது. 5 நிமிடம் பேசினாலே அகிலமே ஆடிப்போய்விடும் என்று பேசிக்கொண்டு இருந்தனர். இன்றைக்கு ஒரு தொகுதியில் வாக்கு வாங்கவே குட்டிக்கரணம் அடிக்கிறார்."

கார்ப்பரேட் மாபியா ஆட்சி: 

"இந்த ரீல்ஸ் வெறியர்களுக்கு மதுராந்தகம் மக்கள் படுதோல்வியைப் பரிசாகத் தந்து ரியாலிட்டி செக் கொடுக்க வேண்டும். நீங்கள் மட்டும் தான் இது மக்களாட்சி என்று சொல்கிறீர்கள். உண்மையில் இது மர்மமான ஆட்சி. யாரோ ஒருத்தரின் கன்ட்ரோலில், யாருடைய நன்மைக்கோ இங்கே கார்ப்பரேட் மாபியா ஆட்சி நடக்கிறது."

“தமிழ்நாடே உங்கள் தீர்ப்புக்குத் தான் காத்துக்கொண்டிருக்கிறது!”

"எதிலுமே வெளிப்படைத்தன்மை இல்லை; எல்லாம் திரைமறைவில் நடக்கிறது. மக்கள் இனிமேலாவது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஒருமுறை ஏமாந்துவிட்டீர்கள். 'மாற்றம்' என்று சொன்னதை நம்பினீர்கள், ஆனால் கிடைத்தது ஏமாற்றம் தான். தமிழ்நாடே உங்கள் தீர்ப்புக்குத் தான் வெயிட்டிங்! நீங்கள் கொடுக்கிற தண்டனையில் தான் இனி மற்ற தொகுதிகளில் குதிரை பேரம் நடக்குமா, நடக்காதா என்று முடிவாகும். இதை மதுராந்தகம் மக்கள் மறந்துவிட வேண்டாம்" என்று மு.க.ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.


No comments

Thank you for your comments