Breaking News

“காஞ்சிபுரத்தில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் கோலாகலத் தொடக்கம்!” - அமைச்சர்கள் தென்னரசு, இரஞ்சித்குமார் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவித்தனர்!

காஞ்சிபுரம் | செப்டம்பர் 28, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களால் இன்று (செப். 28) மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை நேரடி காணொளி வாயிலாகப் பார்வையிட்டதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. ஆர்.வீ. இரஞ்சித்குமார் ஆகியோர் காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்தனர்.

 

என்ன திட்டம் இது? - தகுதிகள் & நிபந்தனைகள்!

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்-சேய் நலனை ஊக்குவிக்கும் வகையில் “1 கிராம் தங்க மோதிரம்” முற்றிலும் இலவசமாக வழங்கும் மகத்தான திட்டம் இதுவாகும்.

  • தகுதி வரம்பு: கடந்த ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளும் இத்திட்டத்தின்கீழ் பயன் பெறத் தகுதியுடையவர்கள்.
  • முந்தைய குழந்தைகளுக்குப் பகிர்ந்தளிப்பு: 22.06.2026 முதல் 26.09.2026 வரை பிறந்த குழந்தைகளுக்குப் பகுதிவாரியாக அழைப்பிதழ்கள் கிராம சுகாதாரச் செவிலியர்கள் மூலம் வழங்கப்பட்டு, குறிப்பிடப்படும் நாளில் மோதிரம் வழங்கப்படும்.
  • புதிய குழந்தைகளுக்கு உடனடி மோதிரம்: 27.09.2026 முதல் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிரசவம் நடைபெறும் அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே உடனுக்குடன் தங்க மோதிரம் வழங்கப்படும்.

பயனாளிகளுக்கான முக்கிய ஆவணங்கள் & வழிகாட்டுதல்!

  1. மருத்துவமனைப் பிறப்பு: குழந்தை கண்டிப்பாகத் தமிழக அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்திருக்க வேண்டும்.
  2. PICME பதிவு கட்டாயம்: தாய்மார்கள் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) அமைப்பில் பதிவு செய்யப்பட்டு, RCH ID பெற்றிருக்க வேண்டும்.
  3. இருப்பிடச் சான்றுகள் (6 ஆவணங்களில் ஒன்று): eKYC பதிவு பெற்ற அடையாள அட்டை (ஆதார் / வாக்காளர் அட்டை / குடும்ப அட்டை / இருப்பிடச் சான்றிதழ் / தொழிலாளர் நல வாரிய அட்டை / அஞ்சல் துறை முகவரிச் சான்று).

காஞ்சிபுரத்தில் 1,469 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டிற்குச் சராசரியாக 8,500 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறக்கின்றனர். இத்திட்டம் அமலுக்கு வந்த ஜூன் 22 முதற்கொண்டு இதுவரை 1,469 குழந்தைகள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்து பயனடையும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

ஏழை, எளிய மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதும், கர்ப்பிணித் தாய்மார்கள் பாதுகாப்பான பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைகளை நாடுவதை ஊக்குவிப்பதுமே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு. ஆஷிக் அலி, இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு. தி. புவனேஷ் ராம், இ.ஆ.ப., மாநகராட்சி துணை மேயர் திரு. ஆர். குமரகுருநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. அமன் திவாரி, இ.ஆ.ப., இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு. எம். ஹிலாரினா ஜோசிட்டா நளினி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மருத்துவமனை ஊழியர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments