Breaking News

வேலூர் மாநகராட்சியில் தங்கு தடையின்றி பெருகும் விதிமீறல் வணிகக் கட்டிடங்கள்! அதிகாரிகள் லஞ்சத்திற்கு அடிமையா? ஆணையர் அ.சுல்தானா அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?


வேலூர்: 

வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் நகர் ஊரமைப்புச் சட்டதிட்டங்களையும் (Town and Country Planning Rules), கட்டிட விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வணிகக் கட்டிடங்கள் அனுமதியின்றியும், முற்றிலும் விதிமீறலுடனும் கட்டப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே உள்ள கட்டிடங்களை முறையான வரைபட அனுமதியின்றி விரிவாக்கம் செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்குச் சிறிய வீடு கட்ட முற்பட்டால் அக்குவேறு ஆணிவேறாகச் சோதனையிட்டு அலைக்கழிக்கும் மாநகராட்சி அதிகாரிகள், கோடிகளில் புரளும் வணிக வளாகங்கள் மற்றும் பிரம்மாண்ட உணவகங்களின் அப்பட்டமான சட்டமீறல்களைக் கண்டும் காணாமல் இருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிட ஆய்வாளர்கள் வேலை செய்கிறார்களா? அல்லது 'கப்பம்' பெறுகிறார்களா?

விதிமீறலுடன் மற்றும் அனுமதியின்றி நடைபெறும் கட்டிடப் பணிகளை உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை நிறுத்தி (Stop Work Notice), முறையான கட்டிட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி பெற்று வரைபடத்தில் உள்ளபடி மட்டுமே கட்டுமானங்களை நடத்த அறிவுறுத்த வேண்டிய முதன்மைப் பொறுப்பு கட்டிட ஆய்வாளர்களுக்குப் (Building Inspectors) உண்டு.

ஆனால், வேலூர் மாநகராட்சியில் உள்ள கட்டிட ஆய்வாளர்கள் தங்களின் கடமையைச் செய்கிறார்களா அல்லது அலுவலகத்திற்காவது வருகிறார்களா என்ற கேள்வி வலுத்துள்ளது. விதிமீறல் கட்டுமானங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குப் பின்னால் பெரும்தொகை கைமாறியிருப்பதாக அப்பகுதி மக்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கண்காணிக்க வேண்டிய நகர திட்டமிடுநர், உதவி நகர திட்டமிடுநரின் மௌனம் ஏன்?

கட்டிட ஆய்வாளர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து, விதிமீறல் கட்டிடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் நகர திட்டமிடுநர் (City Planner) மற்றும் உதவி நகர திட்டமிடுநர் (Assistant City Planner) ஆகியோர் உள்ளனர்.

ஆனால், இவர்களோ சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு முட்டுக்கொடுத்து, விதிமீறல் கட்டிடங்களுக்கு அப்பட்டமாகத் துணைபோகின்றனரா என்ற சந்தேகம் எழும் வகையிலேயே செயல்பட்டு வருகின்றனர். கள ஆய்வுக்குச் செல்லாமல், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இவர்கள் காட்டும் மௌனம், மாநகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

ஆட்சியர் மற்றும் LPA கடிதங்கள் குப்பைத்தொட்டியில்! அவநம்பிக்கையில் பொதுமக்கள்:

உள்ளூர் திட்டக் குழுமம் (LPA - Local Planning Authority) மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பெறப்படும் மக்கள் குறைதீர்ப்பு மனுக்கள், நகல் கடிதங்கள் மீது கூட மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆட்சியரின் உத்தரவுகளையே புறக்கணித்து, வரப்பெறும் புகார்களைக் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு அதிகாரிகள் அலட்சியமாகப் பணியாற்றி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தின் மீதும், அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை முற்றிலுமாகப் போய்விடும் என்பதில் சந்தேகமில்லை.

மாநகராட்சி ஆணையர் அ.சுல்தானா அதிரடி காட்டுவாரா?

வேலூர் மாநகராட்சியில் முறைகேடுகளையும் லஞ்சத்தையும் ஒழித்து, சட்டவிரோத வணிகக் கட்டிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு மாநகராட்சி ஆணையர் திருமதி அ.சுல்தானா அவர்களிடம் உள்ளது.

  • கடமை தவறிய மற்றும் விதிமீறல்களுக்கு உடந்தையாக இருக்கும் கட்டிட ஆய்வாளர்கள், நகர திட்டமிடுநர், உதவி நகர திட்டமிடுநர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

  • மாநகராட்சி முழுவதும் உள்ள விதிமீறல் வணிகக் கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்து, உடனடியாக அமலாக்க நடவடிக்கை (Lock and Seal / Demolition Notice) எடுக்க ஆணையர் உத்தரவிடுவாரா?

– என்பதே வேலூர் நகர மக்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறினால், "காலச்சக்கரம்" நாளிதழ் இந்த விதிமீறல்களையும், அதிகாரிகளின் லஞ்ச ஆட்டத்தையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவதோடு நீதிமன்ற கதவுகளையும் தட்டும்!

– காலச்சக்கரம் நாளிதழ் நிருபர் டைரி குழு..

No comments

Thank you for your comments