Breaking News

“மேல்கதிர்பூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்!” - மாவட்ட ஆட்சியர் திருமதி. தி. சினேகா, இ.ஆ.ப. நேரடி ஆய்வு & உறுதிமொழி!


 காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் மேல்கதிர்பூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. தி. சினேகா, இ.ஆ.ப. அவர்கள் சிறப்புப் பார்வையாளராகக் கலந்துகொண்டு கூட்ட நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.


ஊராட்சி மன்றத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிராம வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த 15 முக்கியத் தீர்மானங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வாசிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

பொதுமக்களின் கோரிக்கைகளும் ஆட்சியரின் அதிரடி தீர்வுகளும்:

கூட்டத்தில் மேல்கதிர்பூர் பகுதி பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்துக் கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பித்தனர்:

  • முக்கியக் கோரிக்கைகள்: கால்நடை கிளை மருந்தகம் அமைத்தல், சமுதாயக்கூடம் கட்டுதல், பள்ளி மாணவர்களின் நேரத்திற்கு ஏற்ப பேருந்துகள் இயக்குதல், விவசாயப் பொருட்களைக் காய வைக்கும் இடங்களில் மதுபாட்டில்கள் வீசிச் சேதப்படுத்துவதைத் தடுத்தல், நீண்டகாலமாக வசிக்கும் 30 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்குதல் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்தல்.
  • சூரிய ஒளி மின்சார நடவடிக்கை: மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு மரபுசார் மின் இணைப்பு வழங்க விதிமுறை இல்லாத சூழ்நிலையில், அவர்களுக்குச் சூரிய ஒளி மின்சார வசதி (Solar Power) ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
  • துறை அதிகாரிகளுக்கு உத்தரவு: பெறப்பட்ட பிற கோரிக்கைகள் குறித்துத் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
  • சுகாதாரம் & குடிநீர்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் குடிநீரில் முறையாகக் குளோரின் கலந்து விநியோகிப்பதை உறுதி செய்தல் ஆகியவை குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • குழந்தை திருமணத் தடை (Help line 1098): குழந்தை திருமணங்களை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் எனக் வலியுறுத்திய ஆட்சியர், குழந்தை திருமணம் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
  • 125 நாள் வேலை திட்டம்: கிராமப்புறங்களில் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் மற்றும் வேளாண் சார்ந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவாக, “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” (Beti Bachao Beti Padhao) திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு உறுதிமொழியைக் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.



No comments

Thank you for your comments