Breaking News

“தமிழகத்திற்குச் சொட்டு நீர் கூட பிச்சையல்ல, அது நமது உரிமை!” - காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 15, 2026

உத்தரகாண்ட் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பேரணிக்குப் பிறகு, அவர் உரையாற்றிய மேடை மற்றும் வளாகத்தைத் தீண்டாமை மனோபாவத்துடன் சிலர் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்த சடங்கைக் கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ. அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் தலைவர் வழக்கறிஞர் ஜி.வி. மதியழகன் முன்னிலை வகித்தார்.

முக்கிய நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு:

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநில நிர்வாகிகள் கன்னியப்பன், பத்மநாபன், அரங்கநாத நகர் அன்பு, வழக்கறிஞர் குருராஜ், மாநகரத் தலைவர் நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்ட நிர்வாகிகள் பூக்கடை மணிகண்டன், தாரன் நந்தகுமார், லோகநாதன், பிரபு, பாலமுருகன், சங்கரலிங்கம், இளைஞர் காங்கிரஸ் அனீஸ், மாநகரப் பகுதித் தலைவர்கள் சப்தகிரி காமராஜ், பட்டு காமராஜ், முத்து கணேசன், ராமர், வஜ்ரவேல், கந்தவேல் மற்றும் வட்டாரத் தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை அதிரடி:

ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசினார்:

காவிரி உரிமை விவகாரம்:

"தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் என்பது யாருடைய பிச்சையோ அல்லது யாசகமோ அல்ல; அது நமது சட்டப்பூர்வமான உரிமை! காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கர்நாடக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டு விவசாயிகளின் பக்கமே காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கும்."

தீண்டாமைச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம்:

"தீண்டாமையை ஒழிக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிகழ்ந்த மேடையைச் சுத்தம் செய்தது போன்ற சனாதன சடங்குகள் தொடர்வது வேதனைக்குரியது. இந்தச் தீண்டாமைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கைது செய்து ஒன்றிய மற்றும் உத்தரகாண்ட் அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்."

சட்டம் - ஒழுங்கு கோரிக்கை:

"தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களைத் தடுக்கக் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இத்தகைய சம்பவங்களை வேடிக்கை பார்க்காமல் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்."

No comments

Thank you for your comments