“கூட்டணி இல்லைனா 10 சீட் கூட ஜெயிக்க முடியாது!” - பேரவையில் திமுக - தவெக - காங்கிரஸ் காரசார விவாதம்!
சென்னை | ஆகஸ்ட் 24, 2026
தமிழகச் சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக, தவெக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கடுமையான அரசியல் விவாதம் எழுந்து பேரவையைச் சூடேற்றியது.

யாருக்கு எச்சரிக்கை தேவை?
காரசார விவாதத்தின் முழுத் தொகுப்பு:
அமைச்சர் விஸ்வநாதன் (காங்கிரஸ்):
"பட்டியலினத்தவர்களுக்குப் அதிகாரம் கொடுத்தது திமுக என்று கூறுகிறீர்கள். ஆனால், முதலமைச்சர் விஜய் ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆகிய இரண்டின் அமைச்சர்களும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சென்னை, மதுரை காமராசர், பாரதிதாசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாங்கள் கல்விச் சமூகப் புரட்சிக்காகத் துணைவேந்தர் நியமனத்தின் அவசியத்தை இங்குப் பேசுகிறோம்."
கோவி.செழியன் (திமுக):
"மேலூர் என்ற பொதுத் தொகுதியில் உங்களை நிற்க வைத்ததே திமுகதான். கறுப்பு-சிவப்பு வேட்டி கட்டிய தொண்டர்களின் உழைப்பால்தான் உங்களுக்கு வாக்குகள் கிடைத்தன."
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா (தவெக):
"காங்கிரஸ், விசிக வெற்றி பெற்றதற்குத் தாங்கள்தான் காரணம் என திமுகவினர் கூறுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக 25 கட்சிகளுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்தீர்கள். ஆனால் 2026-ல் தவெக தனியாக நின்று வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்துத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது.
சென்னையில் 2 தொகுதிகளில் திமுக வென்றதற்குக் காரணமே சிறுபான்மையினரின் வாக்குகள்தான். திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்திருப்பதற்குக் காரணமே கூட்டணி கட்சிகள்தான். ஒரே ஒரு தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டு 50 தொகுதிகளில் வெற்றி பெறச் சொல்லுங்கள், அப்போதுதான் கூட்டணிக் கட்சிகளின் அருமை தெரியும்."
கோவி.செழியன் (திமுக):
"ராஜீவ் காந்தி படுகொலைக்குச் பிறகு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றோம்; அதையும் ராஜினாமா செய்தோம். பூஜ்ஜியத்திலிருந்து மீண்டு வந்த இயக்கம் திமுக. எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயார்."
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு (திமுக):
"கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்றவர்களை வைத்துக்கொண்டுதான் நீங்கள் (தவெக) ஆட்சி அமைக்கிறீர்கள். உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியே அனுப்புங்கள். திமுக இல்லாமல் அவர்களால் தனித்து வெற்றி பெற முடியாது."
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா (தவெக):
"யாரும் யாருக்கும் அடிமை இல்லை. தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்துவிடும். யாருக்கு ஆதரவளிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட முடிவு. நாங்கள் தவறாகப் பேசவில்லை; திமுகவின் ஆதிக்க மனப்பான்மையைத்தான் கேள்வி கேட்கிறோம்."
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்:
"வெற்றியும் தோல்வியும் மக்களால் தீர்மானிக்கப்படுவது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்."
அமைச்சர் செங்கோட்டையன் (தவெக):
"ஒரு தேர்தலிலாவது திமுக தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளதா? ஆட்சி அமைக்க உதவிய காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் இடம் கொடுத்தீர்களா?"
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு (திமுக):
"மத்தியில் ஆட்சி அமைய இருமுறை திமுக ஆதரவாக இருந்தது. அப்போது காங்கிரஸின் ஆதரவு மட்டுமின்றி, பாமகவின் 21 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் எங்களுக்கு இருந்தது."
அமைச்சர் செங்கோட்டையன் (தவெக):
"கடந்த காலத்தில் 11 மத்திய அமைச்சர் பதவிகளைக் காங்கிரஸிடமிருந்து பெற்றுக்கொண்டுதான் திமுக ஆதரவு அளித்தது என்பதை மறந்துவிடக் கூடாது."
காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட்:
"ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ' யாத்திரை நடத்தியதால்தான் திமுகவுக்கு இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. உங்களுக்காக 22 ஆண்டுகள் நாங்கள் பயணித்தோம். இன்று எங்களுக்கான ஆட்சி அமையும் போது நாங்கள் தவெகவிற்கு ஆதரவாகத் துணை நிற்கிறோம்."

No comments
Thank you for your comments