Breaking News

‘சமூக நீதித்துறை’ பெயரை மாற்றி மீண்டும் ‘ஆதிதிராவிடர் நலத்துறை’ என அறிவிக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியரிடம் புரட்சி பாரதம் கட்சி பேரணியாகச் சென்று மனு!


 காஞ்சிபுரம் | ஜூலை 21, 2026

தமிழக அரசு புதிதாகப் பெயர் மாற்றம் செய்துள்ள 'சமூக நீதித்துறை' என்ற பெயரை உடனடியாக மறுபரிசீலனை செய்து, மீண்டும் 'ஆதிதிராவிடர் நலத்துறை' என்றே செயல்படுத்தக் கோரி, புரட்சி பாரதம் கட்சியினர் காஞ்சிபுரத்தில் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

காவலன் கேட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி:

புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வழக்குரைஞர் எஸ்.பி.சி.தனசேகரன், பரணி பி.மாரி, வழக்குரைஞர் தரணிதரன், சோ.தினகர் ஆகியோர் இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். மாவட்டப் பொருளாளர்கள் தலித் அன்னக்கிளி, சி.ஆரோக்கிய ராஜன், ஒன்றியச் செயலாளர்கள் பிரபு, கோபிநாத், ராமு, சிவக்குமார், தரணி, எஸ்வந்த் ராவ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் இருந்து திரளாகத் திரண்டு வந்த கட்சியினர், ஊர்வலமாகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்து, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"நாங்கள் புரட்சி பாரதம் கட்சியில் மாவட்டச் செயலாளர்களாகப் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்குச் சமூக சேவை ஆற்றி வருகிறோம். இம்மக்களின் உரிமைக்காகவும், அரசு சலுகைகள் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பாகவும் 1988-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சிறப்பு உட்கூறு திட்டங்கள் மூலம் பலன்களைப் பெற்றுத் தரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்நிலையில், தவெக அரசு யாரும் எதிர்பாராத வகையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை 'சமூக நீதித்துறை' எனப் பெயர் மாற்றம் செய்து அறிவித்திருப்பது எங்களுக்குப் பேரதிர்ச்சியளிக்கிறது. இம்மக்களுக்கு எந்த விதத்தில் சமூக நீதி கிடைத்திருக்கிறது என்று தெரியவில்லை. இதனால் பட்டியலின மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

ஏற்கனவே கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த பெயர் மாற்றத்தைச் சட்டமன்றத்திலும், விஜிலென்ஸ் கண்காணிப்புக் குழு கூட்டத்திலும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கடுமையாக எதிர்த்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. மேலும், இத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைப் பல திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்வதைத் தடுக்கவும், பெயர் மாற்றத்தைத் திரும்பப் பெறவும் போராடி வருகிறோம்.

எனவே, 'சமூக நீதித்துறை' என்ற பெயரை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து, மீண்டும் 'ஆதிதிராவிடர் நலத்துறை' என்ற பெயரிலேயே செயல்பட உத்தரவிட வேண்டும் என முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்."

திரளாகக் கலந்துகொண்ட நிர்வாகிகள்:

இந்நிகழ்வில் நகரச் செயலாளர்கள் காஞ்சிபுரம் அன்பு, மாங்காடு ரவீந்திரன் தாஸ், ரஞ்சித் குமார், சற்குணராஜ், ராஜன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், மாவட்டத் துணைச் செயலாளர் காச்சம்பாக்கம் ஆறுமுகம், வதியூர் பாலு, சித்திரை மேடு விமல், ஜானகிராமன், சதாசிவம், கிருஷ்ணராஜ், மலை விநாயகம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments