Breaking News

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்த தவெக அரசு கோரிக்கை விடுக்கவில்லை! — மத்திய அரசு அதிரடி விளக்கம்!

ரூ.10,500 கோடியில் முதற்கட்ட பணிகள் தொடர்கிறது; திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் பதில்!

சென்னை, ஜூலை 21- 

பரந்தூர் புதிய பன்னாட்டுப் பசுமைக்கள விமான நிலையத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றோ அல்லது இடத்தை மாற்ற வேண்டும் என்றோ புதிய தமிழக அரசு (தவெக அரசு) மத்திய அரசுக்கு எந்தவிதக் கோரிக்கையும் விடுக்கவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பரந்தூரில் விமான நிலையம் வராது என்ற பிம்பத்தைத் தவெகவினர் ஏற்படுத்தி வந்தனர். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், இத்திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதனால் அப் பகுதியில் நிலங்களை வாங்கியவர்கள் கவலையிலும், விவசாயிகள் உற்சாகத்திலும் இருந்தனர்.

🏛️ மாநிலங்களவையில் திமுக எம்பி பி.வில்சன் கேள்வி!

இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் (ராஜ்யசபா) திமுகவைச் சேர்ந்த எம்பி பி.வில்சன், பரந்தூர் பசுமைக்கள விமான நிலையத்தின் தற்போதைய திட்டம், செலவு மதிப்பீடு, காலக்கெடு மற்றும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு இடத்தை மாற்றக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எதுவும் எழுதியுள்ளதா என கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களின் தற்போதைய விரிவாக்கப் பணிகள் குறித்தும் அவர் விளக்கம் கோரியிருந்தார்.

✈️ ரூ.10,500 கோடியில் பணிகள்; மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோல் பதில்!

திமுக எம்பியின் கேள்விகளுக்குச் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

“பரந்தூரில் பன்னாட்டு பசுமைக்கள விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு (TIDCO) கடந்த 2025 ஏப்ரல் 7-ஆம் தேதி மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. டிட்கோ சமர்ப்பித்த திட்ட அறிக்கையின்படி, முதற்கட்டப் பணிகளுக்கான தோராயமான திட்டச் செலவு ரூ.10,500 கோடி ஆகும்.

நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, நிதி திரட்டுதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது போன்றவை மாநில அரசு மற்றும் திட்ட உருவாக்குநரின் பொறுப்பாகும். பரந்தூர் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் மத்திய அரசுக்கு வரவில்லை.”

🏗️ தமிழகத்தின் பிற விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நிலவரம்:

தமிழகத்தில் உள்ள பிற முக்கிய விமான நிலையங்களின் நவீனமயமாக்கல் பணிகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள்:

  • சென்னை விமான நிலையம்: ரூ.2,467 கோடி செலவில் 2-ஆம் கட்ட நவீனமயமாக்கல் பணி நடைபெறுகிறது. இதில் 81% பௌதிகப் பணிகளும், 71% நிதிப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. மழைநீர் வடிகால் மாற்றத்திற்கு ரூ.209.01 கோடியும், டெர்மினல் 1 புதுப்பித்தலுக்கு ரூ.81.8 கோடியும், ஏர்ஸைடு உள்கட்டமைப்புக்கு ரூ.480.06 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • திருச்சிராப்பள்ளி விமான நிலையம்: ரூ.80.17 கோடி செலவில் புதிய ஏடிசி (ATC) கோபுரம் மற்றும் தொழில்நுட்பக் கூடப் பணிகள் நடைபெறுகின்றன. இதில் 76% பௌதிகப் பணிகளும், 49% நிதிப் பணிகளும் முடிந்துள்ளன.
  • கோயம்புத்தூர் விமான நிலையம்: புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ரூ.51.31 கோடி செலவில் எல்லைச் சுவர் கட்டும் பணியும், ரூ.13.71 கோடி செலவில் தற்போதைய முனையக் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளன.

பரந்தூர் திட்டம் குறித்து மத்திய அரசு அளித்துள்ள இந்தத் தெளிவான விளக்கம், தமிழக அரசியல் களம் மற்றும் பரந்தூர் மக்கள் மத்தியில் மீண்டும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

No comments

Thank you for your comments