காஞ்சிபுரத்தில் புதிய புரட்சி: 125 நாட்களாக உயர்வு.. தினக்கூலி ரூ.345! 'வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதித் திட்டத்தை' தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார்!
காஞ்சிபுரம், ஜூலை 2:
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட களக்காட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற 'ஜன் சம்மேளன்' என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமை தாங்கி இப்புதிய திட்டத்தினையும், புதிய குளங்கள் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
5 ஊராட்சிகளில் புதிய குளங்கள் அமைக்கும் பணி துவக்கம்
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் அமைச்சரால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது:
- காஞ்சிபுரம் ஒன்றியம்: களக்காட்டூர்
- உத்திரமேரூர் ஒன்றியம்: பினாயூர்
- திருப்பெரும்புதூர் ஒன்றியம்: வெங்காடு
- குன்றத்தூர் ஒன்றியம்: கரசங்கால்
- வாலாஜாபாத் ஒன்றியம்: கிதிரிப்பேட்டை
125 நாட்களாக உயர்வு; தினக்கூலி ரூ.345 ஆக அதிகரிப்பு!
விழாவில் பொதுமக்களிடையே கோதாவில் இறங்கிப் பேசிய வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் இத்திட்டத்தின் முக்கியப் பலன்களைப் பட்டியலிட்டார்:
💰 மக்களுக்கான அதிரடி அறிவிப்பு: "ஏற்கனவே நடைமுறையில் இருந்த 100 நாள் வேலைத் திட்டம், தற்போது இப்புதிய திட்டத்தின் கீழ் 125 நாள் வேலைத் திட்டமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தொழிலாளர்களுக்குத் தற்போதைய தினசரி சம்பளம் ரூ.336 ஆக வழங்கப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு, இனி ரூ.345 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கிராமப்புற மக்கள் உங்கள் ஊரை நீங்களே மேம்படுத்திக் கொள்ளவும், உங்களுடைய பொருளாதார வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்ளவும் இத்திட்டம் மிகப்பயனுள்ளதாக இருக்கும். அரசு வழங்கும் இந்த வேலைவாய்ப்பைப் பயன்படுத்தி கிராமமும், நீங்களும் வளர்ச்சியடைய வேண்டும்."
20.93 லட்சம் மனித சக்தி நாட்கள் ஒதுக்கீடு
ஏற்கனவே நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தில் இருந்த 461 பணிகள் மற்றும் அதன் 87,000 மனிதசக்தி நாட்கள் அனைத்தும் தற்போது இப்புதிய 'வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்திற்கு' (VB-GRAM-G) முறைப்படி கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் 1,593 புதிய பணிகள் அடையாளம் காணப்பட்டு, இன்று (02.07.2026) முதல் மாவட்ட முழுவதும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் ஆஷிக் அலி, உதவி திட்ட இயக்குனர் சுந்தர், களக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் நளினி டில்லிபாபு, களக்காட்டூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலாஜி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், காஞ்சிபுரம் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments