படப்பையில் மின்கசிவு சோகம்: பழுதடைந்த மின்மாற்றியால் அறுந்து விழுந்த மின்வயர் பட்டு மூதாட்டி பலி! - புதிய மின்மாற்றி அமைக்கக் பொதுமக்கள் கொதிப்பு!
காஞ்சிபுரம் | ஜூலை 25, 2026
தொடரும் மின்வாரிய அலட்சியம்:
கீழ் படப்பை கிராமம், துலக்காத்தாம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மின்மாற்றி (Transformer) கடந்த சில காலமாகவே மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்மாற்றி அமைப்பதற்குப் பதிலாக, அடிக்கடி அறுந்து விழும் மின் வயர்களைத் தற்காலிகமாக இணைத்து மட்டுமே வந்துள்ளனர்.
ஏற்கனவே இந்த மின்மாற்றியால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் பசு மாடு ஒன்று மின்சாரம் தாக்கி பலியான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் மின்வாரிய நிர்வாகம் நிரந்தரத் தீர்வு காணாமல் அலட்சியப்போக்கைக் கையாண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மின்வயர் பட்டு மூதாட்டி பலி:
இந்நிலையில், அதே தெருவைச் சேர்ந்த வெங்கடாம்மாள் (66) என்ற மூதாட்டி அவ்வழியாகச் சென்றபோது, மின்மாற்றியில் இருந்து திடீரென அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்வயர் அவர் மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மூதாட்டி வெங்கடாம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த படப்பை காவல் நிலையப் போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய மின்மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை:
"ஏற்கனவே மாடு பலியானபோதே எச்சரிக்கையாக இருந்திருந்தால் இந்த மனித உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம். இனியும் தற்காலிக இணைப்புகளை வழங்காமல், கரசங்கால் மின் நிலைய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு அப்பகுதியில் பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டுப் புதிய மின்மாற்றியை அமைத்துத் தர வேண்டும்" எனப் பகுதி மக்கள் ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments
Thank you for your comments