Breaking News

காஞ்சிபுரம்: "தோட்டக்கலை 2.0 திட்டத்தைக் கைவிடு!" - காவிளன் கேட் பகுதியில் அரசு அலுவலர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

 காஞ்சிபுரம் | ஜூலை 18, 2026

தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறையால் கொண்டுவரப்பட்டுள்ள ‘உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0’ (UATT 2.0) திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரத்தில் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்  கண்டன கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தனித்துறையின் பின்னணியும் முக்கியத்துவமும்:

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 60% உள்ள விவசாயப் பெருமக்களுக்குத் தினசரி வருமானத்தை உறுதி செய்வதிலும், வெளிநாட்டுச் சந்தைகள் மூலம் பெருமளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் தோட்டக்கலை பயிர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்துறையின் அசுர வளர்ச்சி மற்றும் தனித்துவத்தைக் கருத்தில் கொண்டே, கடந்த 1979-ஆம் ஆண்டு இது ஒரு தனித்துறையாக உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

ஆர்ப்பாட்டமும் அதிகாரிகளின் குமுறலும்:

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள UATT 2.0 திட்டத்தை உடனடியாகக் கைவிடக் கோரி, காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் தாமரை தூவாசன் தலைமையில் இத்துறை அலுவலர்கள் திரண்டு வந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் தாமரை தூவாசன் மற்றும் அலுவலர்கள் தெரிவித்ததாவது:

  • தொழில்நுட்பப் பற்றாக்குறை ஏற்படும்: "தற்போது கொண்டுவரப்பட்டுள்ள UATT 2.0 திட்டமானது முழுக்க முழுக்க தானிய மற்றும் மானாவாரி பயிர் சாகுபடி பரப்பை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தோட்டக்கலை தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்க பிற துறை அலுவலர்களை இணைக்கும் பொழுது, விவசாயிகளுக்குத் தேவையான உயர் தொழில்நுட்பங்கள் சரிவரச் சென்றடையாது. இதனால் விவசாயப் பெருமக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள்."
  • தனித்துவப் படிப்பின் அவசியம்: "தோட்டக்கலை பயிர் சார்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களை, இத்துறையில் தனித்துவப் பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்த தோட்டக்கலைத் துறை அலுவலர்களால் மட்டுமே விவசாயிகளுக்குத் தெள்ளத் தெளிவாகக் கொண்டு சேர்க்க முடியும்."
  • வேலைவாய்ப்புப் பறிபோகும் அபாயம்: "புதியதாக இத்துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து வரும் ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்களுக்கு, இத்துறையில் அரசு வேலை கிடைப்பது முற்றிலும் தவிர்க்கப்படும் சூழல் உருவாகும். அவர்களின் எதிர்கால நிலையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்."

நிர்வாகிகள் பங்கேற்பு:

காவலன் கேட் பகுதியில் நடைபெற்ற இந்த எழுச்சிமிக்க கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நந்தகோபால், தணிகைவேல், கார்த்திக் ராஜா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராகத் தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

No comments

Thank you for your comments