மாமல்லபுரம் மின் விபத்து: 4 கூலித் தொழிலாளர்கள் பலி - தவெக சார்பில் மல்லை சி.ஏ.சத்யா இரங்கல் & நிதியுதவி கோரிக்கை!
செங்கல்பட்டு | ஜூலை 11, 2026
மாமல்லபுரத்தில் அரங்கேறிய கொடூர மின் விபத்து:
இன்று (11/07/2026) சனிக்கிழமை, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன் (55), பாட்சா (45), பாலாஜி (32), மற்றும் பிரபு (22) ஆகிய நால்வரும் பூமியில் இருந்து ராட்சத இரும்புக் குழாயை மேலே தூக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரும்புக் குழாய் அவர்களின் கையில் இருந்து நழுவி, அருகில் சென்ற உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பி (High Voltage Wire) மீது சாய்ந்தது. இதில் பயங்கரமான முறையில் மின்சாரம் பாய்ந்து, நால்வரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: மல்லை சி.ஏ.சத்யா வலியுறுத்தல்!
இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சி.ஏ.சத்யா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“உயிரிழந்த நான்கு பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஆவர். இவர்களின் மறைவு அக்குடும்பங்களுக்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக தகுந்த நிவாரண உதவித்தொகையையும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பையும் வழங்கி மனிதாபிமானத்தோடு உதவிட வேண்டும் எனத் திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் மிகத் தாழ்மையுடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.”
உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களைக் கைப்பற்றிய மாமல்லபுரம் போலீஸார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments