வேலூரில் மீண்டும் ஒரு மெகா விதிமீறல்! 'அமிர்தா ஃபைன் டைனிங்' கட்டிடமும் சட்டத்திற்குப் புறம்பானதா?
காட்பாடி சில்க் மில் அருகே 'டார்லிங்' குழுமத்தின் பிரம்மாண்ட அராஜகம்! மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாதந்தோறும் லட்சங்களில் 'மாமூல்'? கொந்தளிக்கும் பொதுமக்கள்.
வேலூர், ஜூலை 27: வேலூர் மாநகராட்சியில் பண பலமும், அதிகாரப் பின்னணியும் கொண்ட பெரும் புள்ளிகள் சட்ட திட்டங்களை முற்றிலுமாகக் காற்றில் பறக்கவிட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில், வேலூரின் அடையாளமாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் ‘டார்லிங்’ குழுமம், அடுத்தடுத்துப் பல்வேறு கட்டிட விதிமீறல்களில் ஈடுபட்டு வருவது ஆதாரங்களுடன் அம்பலமாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்டலம் 1-ல் மீண்டும் ஒரு 'அமிர்தா' விதிமீறல்!
ஏற்கனவே வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் 'சிக்னேச்சர் பை டார்லிங்' உணவகம், வெறும் 994 சதுர அடியில் குடோன் அனுமதி பெற்றுவிட்டு பிரம்மாண்ட ரெஸ்டாரண்ட் நடத்தி வருவது அம்பலமானது. இந்தச் சர்ச்சை அடங்குவதற்குள், அதே 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட காட்பாடி சில்க் மில் (Silk Mill) அருகே அமைந்துள்ள டார்லிங் குழுமத்தின் மற்றொரு பிரம்மாண்ட உணவகமான 'அமிர்தா ஃபைன் டைனிங்' (Amirtha Fine Dining) கட்டிடமும் முற்றிலுமாக நகர் ஊரமைப்புச் சட்ட விதிகளையும், வரைபட அனுமதிகளையும் மீறிக் கட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் வெடித்துள்ளன.
அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு பரப்பளவில், எவ்வித சட்டப்பூர்வ விதிமுறைகளையும் பின்பற்றாமல் இந்தக் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிகாரிகள் கோமாவிலா? 'மெகா மௌனம்' காப்பது ஏன்?
ஒவ்வொரு அடியிலும் விதிமீறல்களைச் சுமந்து நிற்கும் 'அமிர்தா' மற்றும் 'சிக்னேச்சர்' ஆகிய இரு பிரம்மாண்ட உணவகக் கட்டிடங்களும் அதிகாரிகளின் கண் முன்னேயே இயங்கி வருகின்றன. இருப்பினும், வேலூர் மாநகராட்சி நிர்வாகமும், உள்ளூர் திட்டக்குழுமமும் (Local Planning Authority) இதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? அதிகாரிகள் 'கோமா'வில் இருக்கிறார்களா? அல்லது டார்லிங் குழுமத்திற்குத் துணை போகிறார்களா? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
லட்சங்களில் மாமூல்? சமூக ஆர்வலர்கள் பகீர் குற்றச்சாட்டு! "விதிமீறல் கட்டிடங்கள் குறித்து சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அடுக்கடுக்காகப் புகார்கள் அளித்த போதிலும், மாநகராட்சி நிர்வாகம் எந்தவொரு தகுந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சில முன்னணிச் செய்தித் தாள்களில் புகைப்பட ஆதாரங்களுடன் செய்திகள் வெளிவந்தாலும் அதிகாரிகள் மெகா மௌனம் காக்கின்றனர். இதன் பின்னணியில், இந்த இரு உணவகங்களில் இருந்தும் மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் 'மாமூல்' கைமாறுகிறதா?" என்ற சந்தேகத்தை மக்கள் வெளிப்படையாகவே எழுப்புகின்றனர்.
கண்துடைப்பு நோட்டீஸ்... தொடரும் மெத்தனப் போக்கு!
செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் போது மட்டும், அதிகாரிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளக் 'கண்துடைப்புக்காக' பெயரளவில் ஒரு நோட்டீஸை வழங்கிவிட்டு அமைதியாகி விடுகின்றனர். அதற்குப் பிறகு எவ்வித அமலாக்க நடவடிக்கையோ (Enforcement Action) அல்லது கட்டிடத்திற்குச் சீல் வைக்கும் நடவடிக்கையோ எடுக்கப்படுவதில்லை.
சாதாரண ஏழை எளிய மக்கள் தங்களது சொந்த இடத்தில் ஒரு சிறிய கழிப்பறை அல்லது சிறு அறை கட்டினாலே, ஜே.சி.பி இயந்திரத்துடன் விரைந்து வந்து இடித்துத் தள்ளும் மாநகராட்சி அதிகாரிகள், டார்லிங் போன்ற மெகா நிறுவனங்களின் அடுக்கடுக்கான சட்ட விதிமீறல்களைக் கண்டு அஞ்சி நடுங்குவது ஏன்? பாமரனுக்கு ஒரு நீதி... அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதியா?
டார்லிங் குழுமத்தின் அனைத்துக் கட்டிடங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்!
வேலூர் மாநகராட்சியில் இதுபோன்று எண்ணற்ற வணிகக் கட்டிடங்கள் விதிமீறல்களுடனேயே இயங்கி வருவதால், மாநகராட்சிக்குக் கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வரி மற்றும் உரிமக் கட்டண வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
முழுமையான ஆய்வு தேவை: டார்லிங் குழுமத்திற்குச் சொந்தமான அனைத்து ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் மற்றும் வணிகக் கட்டிடங்களையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து உடனடியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
சட்டப்பூர்வ நடவடிக்கை: நகர் ஊரமைப்புச் சட்டத்தின்படி, விதிமீறல் கட்டிடங்களான 'அமிர்தா' மற்றும் 'சிக்னேச்சர்' உணவகங்களுக்கு உடனடியாகச் சீல் வைக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
ஊழல் அதிகாரிகள் மீது அதிரடி: பொதுமக்கள் கொடுக்கும் புகார்களைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, மாமூலுக்கு மயங்கி விதிமீறல்களுக்குத் துணைபோகும் லஞ்ச அதிகாரிகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மூலம் வழக்குப் பதிவு செய்து கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனியாவது வேலூர் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித ஊழலுக்கும் இடமளிப்பில்லாமல், தவறிழைத்த பெரும் புள்ளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
No comments
Thank you for your comments