Breaking News

அடுத்த 25 ஆண்டுகளுக்கு நான் தான் வேலூருக்கே ராஜா! தவெக எம்.எல்.ஏ வினோத் கண்ணன் மிரட்டல் பேச்சு



 வேலூர், ஜூன் 24-

தமிழக அரசியலில் ஒரு தூய்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு, மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் தளபதி விஜய். ஆனால், தலைவரின் உன்னத எண்ணங்களுக்கும், கழகத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும் முற்றிலும் மாறாக, வேலூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வினோத் கண்ணன் தார்மீக நெறிகளைத் தூக்கி எறிந்து விட்டு, ரவுடி பாணியில் சொந்தக் கட்சியினரையே மிரட்டி வருவதாக, தவெக அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நான்தான் ராஜா..!" - வேலூரில் அரங்கேறும் தவெக எம்.எல்.ஏ-வின் மிரட்டல் அரசியல்:

வேலூர் தொகுதியில் தவெக பெற்ற மாபெரும் வெற்றி என்பது, வேட்பாளரின் தனிப்பட்ட தகுதியால் கிடைத்தது அல்ல; ஒட்டுமொத்தப் பொதுமக்களும், ரசிகர்களும் தலைவர் விஜய் மீது வைத்த விசுவாசத்தால் மட்டுமே சாத்தியமானது. 

ஆனால், மக்கள் கொடுத்த அங்கீகாரத்தை வைத்துக் கொண்டு வினோத் கண்ணன் தற்பொழுது ஆடியன்ஸ் மற்றும் தொண்டர்களிடம் காட்டி வரும் மிரட்டல் தோரணை உள்கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



விரைவில் அமைச்சர்!

“அடுத்த 25 ஆண்டுகளுக்கு நான் தான் வேலூருக்கே ராஜா! விரைவில் நான் அமைச்சராகவும் போகிறேன், கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பும் எனக்குத்தான் வரப்போகிறது. அதனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைவரும் எனக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும்; இல்லையென்றால் அடையாளம் தெரியாமல் ஒழித்துக் கட்டிவிடுவேன்” என்று வினோத் கண்ணன் கொக்கரித்துப் பேசியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

கட்சியில் இணைந்து வெறும் ஒரே ஒரு ஆண்டு மட்டுமே ஆன ஒரு நபர், அதற்குள்ளாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்தக் கட்சியினரையும், நிர்வாகிகளையும் தன் அதிகாரத்தின் கீழ் அடக்கி ஆள நினைக்கும் இந்த சர்வாதிகார மனப்போக்கு தவெக-வின் மூத்த நிர்வாகிகளை மிரளச் செய்துள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினரே, எவ்வித ஜனநாயகப் பண்புகளுமற்று சகக் கட்சியினரை நோக்கி இத்தகைய ரவுடி பாணியில் மிரட்டல் தொனியில் பேசியிருப்பது வேலூர் தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், உள்கட்சிப் பூசலையும் ஏற்படுத்தியுள்ளது. 

 பல ஆண்டுகால உழைப்பு பலியா? - தொண்டர்கள் குமுறல்!

இந்த விவகாரத்தில் வேலூர் மாவட்டத் தவெக விசுவாசிகள் எழுப்பும் மிக நியாயமான கேள்வி என்னவென்றால், வினோத் கண்ணன் கட்சியில் இணைந்து வெறும் ஒரு ஆண்டு காலம் தான் ஆகிறது. ஆனால், தவெக தலைவர் தளபதி விஜய் அவர்களின் மீதுள்ள ஈர்ப்பால், கடந்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களது குடும்பம், தொழில் என அனைத்தையும் பாராமல், ரசிகர் மன்றக் காலத்திலிருந்தே உழைத்து, இன்று கட்சி வரை பாடுபட்ட எத்தனையோ விசுவாசமான தொண்டர்கள் வேலூரில் இருக்கிறார்கள்.

"கட்சியில் இணைந்து ஒரு வருடமே ஆன ஒரு நபர், எம்.எல்.ஏ என்ற மிரட்டல் பதவியைப் பயன்படுத்தி, பல ஆண்டுகளாக ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த மூத்த தொண்டர்களைப் புறந்தள்ளிவிட்டு, 'அடையாளம் தெரியாமல் ஒழித்துவிடுவேன்' என்று ரவுடி பாணியில் மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று உண்மையான உடன்பிறப்புகள் ஆவேசத்தோடு கேள்வி எழுப்புகின்றனர்.

வேலூரில் ஸ்ரீ நாராயணி அம்மா அவர்களின் பின்புலத்தைத் பலமாக கொண்டு, தனக்குச் சாதகமாகக் காட்டி, உள்கட்சி ஒற்றுமையைக் குலைக்கும் இத்தகைய செயல்பாடுகள், தூய்மையான அரசியல் செய்ய நினைக்கும் தலைவர் முதல்வர் விஜயின் எண்ணத்திற்குப் பின்னால் இருந்து குத்தப்படும் முதுகெலும்பு முறிவாகவே பார்க்கப்படுகிறது.

‘களை’ எடுக்குமா தலைமை?

தொண்டர்களை மதிக்காமல், தானே வேலூரின் ஏகபோக ராஜா என்று வலம் வரும் எம்எல்ஏ வினோத் கண்ணன் மீது வேலூர் பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் நாளுக்கு நாள் கடுமையான எதிர்ப்பு அலை உருவாகி வருகிறது. இந்த நிலை நீடித்தால், உள்கட்சிப் பூசலால் வீழ்ந்த பிற கட்சிகளின் கதி தான் தவெக-விற்கும் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, கழகத் தலைவர் முதல்வர் விஜய் அவர்களும், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களும், வினோத் கண்ணனின் இந்த அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் ரவுடித்தனமான மிரட்டல் லீலைகளை ஆரம்ப நிலையிலேயே விசாரணை செய்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், விசுவாசத் தொண்டர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, தவறிழைக்கும் இத்தகைய நபர்களை உடனடியாகக் களை எடுக்க வேண்டும் என்றும் வேலூர் மாவட்டத் தவெக விசுவாசிகள் ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.


த.வெ.க தவிர்க்க வேண்டிய வரலாற்றுப் பிழை!
சட்டமன்ற உறுப்பினர்களின் எல்லையை மீறும் ஆதிக்கம்

 தமிழக அரசியல் வரலாற்றில், பண நாயகத்தைத் தவிடுபொடியாக்கி விட்டு, மக்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மிக நேர்மையான முறையில் வாக்களித்துத் தவெக&விற்கு ஒரு பிரம்மாண்ட வெற்றியைத் தேடித்தந்தனர். இந்த வெற்றி என்பது, ஒவ்வொரு தொகுதியிலும் நின்ற வேட்பாளர்களைப் பார்த்துப் பெற்ற வெற்றியல்ல; மாறாக, ஒட்டுமொத்தப் பொதுமக்களும் ஒவ்வொரு வேட்பாளரையும் கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களாகவே கருதி, மாற்றத்தை நோக்கிப் போட்ட ஒற்றை ஓட்டு தான் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

ஆனால், தற்போதைய சூழலில் சில சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுக்குக் கிடைத்த மக்கள் அங்கீகாரத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் பாணியில் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது, அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக&வின் வீழ்ச்சி உணர்த்தும் பாடம்:  தவெக தவிர்க்க வேண்டிய தவறுகள்!

ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அதிமுக, இன்றைய அவல நிலைக்குச் சென்றதற்கு இரண்டு மிக முக்கியக் காரணங்களை நாம் உற்று நோக்க வேண்டும்:

ஆரம்பக் காலகட்டத்திலிருந்து கட்சிக்காகத் தங்களது வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி உழைத்த உண்மையான தொண்டர்களைத் தூக்கி எறிந்தது முதல் தவறு. கட்சியின் மாவட்டப் பொறுப்புகளைத் தகுதியற்ற, தவறான நபர்களிடம் ஒப்படைத்ததும், பதவிகளைச் சாதியின் அடிப்படையில் வாரி வழங்கியதும், கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களை உதாசீனம் செய்ததும் அடுத்தடுத்த வீழ்ச்சிகளுக்குக் காரணமாயின. 

மேலும், தங்களுக்குச் சாதகமாக இருக்கும் ஆதரவாளர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடமே (விலிகிs) கட்சியின் முக்கியப் பொறுப்புகளையும் அதிகாரப் பதவிகளையும் வாரி வழங்கியது அக்கட்சியின் அழிவிற்கே வழிவகுத்தது.

இந்த வரலாற்றுப் பிழையைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முற்றிலும் தவிர்க்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கட்சிப் பதவிகளை வழங்குவது, ஒரு கட்சிக்குள்ளேயே அதிகாரக் குவியலை உருவாக்கி, அக்கட்சியின் அழிவிற்கு வழிவகுக்கும்.

கட்டுப்பாடான இயக்கத்திற்கு இரு கண்கள்:  கட்சிப் பதவியும் & மக்கள் பணியும்!

நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமே "ஒருவரின் அதிகாரத்தை மற்றொருவர் கண்காணிப்பது" (Checks and Balances) என்ற உன்னதக் கோட்பாட்டின் கீழ் தான் இயங்குகிறது. அதே போன்று, கழகமும் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டுமெனில், கட்சிப் பொறுப்பாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போலத் தனித்தனியாகச் செயலாற்ற வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்களின் பணி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது முழு நேரத்தையும் தத்தமது தொகுதி மக்களின் நலப் பணிகளுக்காக மட்டுமே செலவிட வேண்டும். அரசு அலுவலகங்களில் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்துவதையோ, பினாமி பெயர்களில் டெண்டர் எடுப்பதையோ விடுத்து, மக்கள் குறைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கட்சிப் பொறுப்பாளர்களின் பணி: ஆரம்பக் காலகட்டத்திலிருந்து, எவ்வித பிரதிபலனும் பாராமல், ரசிகர் மன்றக் காலத்திலிருந்தே தவெக-விற்காகக் களத்தில் நின்று உழைத்த விசுவாசமிக்கத் தொண்டர்களைப் போற்றும் வகையில் அவர்களுக்கு மட்டுமே மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முதன்மையான கட்சிப் பதவிகளை வழங்க வேண்டும்.

"சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கட்சிப் பதவிகளை வழங்கக் கூடாது! அவர்களிடம் கட்சிப் பொறுப்புகள் சென்றடைந்தால், அவர்கள் மாவட்டச் செயலாளர் பதவிகளையும் கைப்பற்ற முயல்வார்கள். இது நீண்ட காலம் உழைத்தவர்களைப் புறந்தள்ளி, அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கே வழிவகுக்கும்."

இப்படி இரு பிரிவினரும் தங்களது எல்லைகளை உணர்ந்து செயல்படும் போது தான், ஒருவர் தவறு செய்வதை மற்றொருவர் கண்காணித்துத் தட்டிக் கேட்க முடியும். இதுவே கழகத்தைக் கட்டுப்பாட்டுடனும், தூய்மையாகவும் வைத்திருக்கும்.

தலைமையும். பொதுச்செயலாளரும் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை

"நோயை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்" என்பார்கள். எனவே, கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களும், கட்சியைத் திறம்படக் கையாண்டு வரும் பொதுச்செயலாளர் புசி ஆனந்த் அவர்களும், இதுபோன்ற சுயநலப் போக்குடைய சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடியாகக் களை எடுக்க வேண்டும்.

எம்.எல்.ஏ&க்கள் தங்களது மக்கள் பணியை மட்டும் கவனிக்கும் படியும், உண்மையான விசுவாசத் தொண்டர்களுக்குக் கட்சிப் பதவிகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் தமிழக வெற்றிக் கழகம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து, எள்ளளவும் தொய்வின்றித் தொடர்ந்து சாதனைப் பயணத்தைத் தொடரும்.



No comments

Thank you for your comments