'திரைக்கதை மன்னன்' கே.பாக்யராஜ் மறைவு: "தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த எழுத்துச் சகாப்தம் நிறைவுற்றது" – நேஷனல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் டாக்டர் கா.குமார் நெகிழ்ச்சிப் புகழஞ்சலி!
சென்னை, ஜூன் 27:
"எழுத்தாலும் புன்னகையாலும் தமிழ் நெஞ்சங்களை வென்ற மாபெரும் கலைஞனுக்குக் கண்ணீர் அஞ்சலி!"
"தமிழ் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்', எளிய மனிதர்களின் வாழ்வியலைத் தன் எழுதுகோலால் வெள்ளித்திரையில் காவியமாக்கிய மாபெரும் படைப்பாளி, அண்ணன் கே.பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து சொல்லொணாத் துயரமும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
வெள்ளித்திரையில் வசனங்களால் வித்தை காட்டிய அண்ணன் பாக்யராஜ் அவர்கள், பத்திரிகை உலகிலும் முத்திரை பதித்த ஒரு உன்னதமான ஊடகவியலாளர். அவர் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து நடத்தி வந்த 'பாக்யா' வார இதழ், தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் உள்ள சாமானிய மக்களின் வாசிப்புப் பசியைத் தீர்த்ததோடு, பல இளம் எழுத்தாளர்களுக்குப் பாசறையாகவும் திகழ்ந்தது. எழுத்துத் துறையின் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் அவர் கொண்டிருந்த மதிப்பும் பாசமும் என்றென்றும் நினைவுகூரத்தக்கது.
பாரதிராஜா எனும் இமயத்தின் நிழலில் வளர்ந்து, தமிழ்ச் சினிமாவுக்குப் பார்த்திபன், பாண்டியராஜன் போன்ற ஆளுமைகளைத் தந்து, ஒரு மாபெரும் இயக்குநர் பரம்பரையையே உருவாக்கிய பெருமை அவருக்குரியது. அண்மையில்தான் அவரது குருநாதரின் மறைவு நம்மை உலுக்கியது. அந்தச் சுவடு மாறுவதற்குள், தன் அசாத்திய புன்னகையாலும் அறிவார்ந்த நகைச்சுவையாலும் நம்மை மகிழ்வித்த 'திரைக்கதை மேதை' நம்மை விட்டுப் பிரிந்திருப்பது கலை உலகிற்கும், பத்திரிகை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
தன் வாழ்நாளின் இறுதிவரை முத்திரைக் கதைகளைத் தந்த அந்தப் பேனா இன்று மௌனித்துவிட்டது. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், வாசகப் பெருமக்களுக்கும் மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக எனது கண்ணீர் மல்கிய புகழஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலை உள்ளவரை, தமிழ் எழுத்து உள்ளவரை அண்ணன் பாக்யராஜின் திருநாமம் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும்!"
nju-President-dr-ka-kumar-condolence-tribute-director-actor-k-bhagyaraj


No comments
Thank you for your comments