அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவைக்கூட பார்க்க விடாமல் இடையூறு செய்தது திமுக அரசு: காஞ்சிபுரத்தில் நிர்மலா சீதாராமன் சாடல்!
காஞ்சிபுரம், ஜூன் 25:
"அயோத்தியில் பாரதப் பிரதமர் ராமர் கோயிலைத் திறந்து வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காஞ்சிபுரத்தில் அகண்ட தொலைக்காட்சி (LED Screen) மூலம் பொதுமக்கள் பார்க்கக் கூட அப்போதைய திமுக அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளையும், இடையூறுகளையும் செய்தது" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
எஸ்எஸ்கேவி கல்வி நிறுவனங்களின் 120 ஆண்டுகாலச் சேவை
காஞ்சிபுரத்தில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த எஸ்எஸ்கேவி (SSKV) கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா மற்றும் நூறாண்டு கடந்த சிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'பெண்ணின் பெருந்தக்க யாவுள' என்ற புதிய நூலினை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். அப்போது, கடந்த 2024 ஜனவரியில் நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் போது தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் ரீதியான இடையூறுகளை அவர் விரிவாகப் பட்டியலிட்டார்.
உச்ச நீதிமன்றம் வரை சென்ற போராட்டம்: அமைச்சர் பேச்சு
அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
"கடந்த 24.1.2024 அன்று அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட போது, மத்திய அமைச்சர்கள் அனைவரும் அவரவர் விரும்பிய முக்கியத் தலங்களிலிருந்து அதனைப் பார்க்க முடிவு செய்தோம். அதன்படி, தசரத சக்கரவர்த்தி புத்திர காமேஷ்டி யாகம் செய்த வரலாற்றுச் சிலைகள் உள்ள காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அகண்ட தொலைக்காட்சி அமைத்து, கம்பராமாயண சொற்பொழிவுடன் நிகழ்வைக் காண நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம்."
"ஆனால், அந்தத் நேரடி ஒளிபரப்பைக் கூடப் பார்க்க விடாமல் அப்போதிருந்த திமுக அரசு காவல்துறையை வைத்துப் பல்வேறு இடையூறுகளை விளைவித்தது. இறுதியாக, நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் அவசர அனுமதியைப் பெற்றுத்தான் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அமர்ந்து அயோத்தி திறப்பு விழாவைக் கண்டுகளித்தோம்."
அயோத்தி ராமர் கோயிலுடன் காஞ்சியின் ஆன்மீகத் தொடர்பு
தொடர்ந்து காஞ்சிபுரத்திற்கும் அயோத்திக்கும் உள்ள ஆன்மீகத் தொடர்பை விளக்கிய அமைச்சர், "இந்தியாவிலேயே காஞ்சிபுரம் உபநிஷத் மடத்தில் (அகஸ்தீஸ்வரர் மற்றும் ராமச்சந்திர சுவாமி ஆலயம்) மட்டும்தான் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே முனிவர்களால் சின்னச்சின்ன அக்ஷரங்களால் வடிவமைக்கப்பட்ட 'ஸ்ரீராம யந்திரம்' பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தின் மாதிரியே அயோத்தி ராமர் கோயிலுக்கும் காஞ்சி சங்கர மடத்தின் மூலம் வழங்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், ஆதிசங்கரர் சன்னியாசியாக இருந்தாலும் தாயின் பெருமையை உணர்ந்து கவிதை இயற்றியவர் என்றும், பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து சங்கர மடம் கல்வி நிறுவனங்களை வளர்த்து வருவதாகவும் பாராட்டினார்.
420 கிலோ வெண்கல ராமயந்திரம்: காஞ்சி சங்கராசாரியர் ஆசியுரை
விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1904 முதல் சங்கர மடம் பெண்கள் கல்விக்காகச் செய்து வரும் சேவைகளை நினைவுகூர்ந்தார். மேலும், அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 420 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட வெண்கல ராமயந்திரம் சென்னை ஐஐடி-யின் (IIT Madras) தொழில்நுட்பக் கூட்டுடன் நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டு, காஞ்சி மடத்தின் மூலமே அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியையும் விவரித்தார்.
இவ்விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் சங்கர மடத்தின் செயலாளர் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மூத்த மேலாளர் ந.சுந்தரேச ஐயர், மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments