தன்னார்வ ரத்ததான சேவை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு மத்திய அரசு விருது!
காஞ்சிபுரம், ஜூன் 19:
குஜராத் மாநாட்டில் உயரிய அங்கீகாரம்
மத்திய அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையும், தேசிய ரத்ததான கொடையாளர் குழுமமும் இணைந்து நிகழாண்டு ஜூன் 16-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய அளவிலான மாநாடு ஒன்றினை நடத்தினார்கள். இம்மாநாட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த உயரிய மேடையில், இந்தியாவிலேயே தன்னார்வ ரத்ததான சேவையில் மிகச் சிறந்த மற்றும் முதன்மையான பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருவதற்காகத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருது வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பொதுச் செயலாளர் பெருமிதம்
மத்திய அரசு வழங்கிய இந்த தேசிய விருதினை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில செயலாளர்களான தமிமுன் அன்சாரி, அல்அமீன் மற்றும் அப்துல் முஹஸின் ஆகியோர் டெல்லி மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் முஜ்புர் ரகுமான் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"மனிதநேய அடிப்படையில் தொடர்ந்து நமது அமைப்பின் தொண்டர்கள் செய்து வரும் குருதி கொடை சேவைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் இது. அவசர காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் சாதி, மத எல்லைகளைக் கடந்து ரத்ததானம் வழங்கும் நமது தொண்டர்களின் அர்ப்பணிப்பிற்கு இந்த விருது சமர்ப்பணம்," என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments