அரசியல் என்ட்ரி கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்? - "அம்மா ஓகே சொல்லிட்டாங்க, ஆனா..." - ரசிகர்களிடம் கருத்து கேட்டு வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
சென்னை | ஜூன் 12, 2026
திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருவதோடு, பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வரும் ராகவா லாரன்ஸ் இன்று காலை 10 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது அவர் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, தனது அரசியல் ஆசை மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் நெகிழ்ச்சியான காரணங்களை ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார்.
"நான் அரசியலுக்கு வரலாமா? அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா?" என்று தனது ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளது தற்போது தமிழக அரசியலிலும், திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே" - குட்டிக்கதை சொன்ன லாரன்ஸ்:
ராகவா லாரன்ஸ் தனது வீடியோவில், தனக்கு மிகவும் பிடித்த "கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே" என்ற வாசகத்துடன் பேசத் தொடங்கினார். வேலை செய்தால் அதற்கான பலனை கடவுள் நிச்சயம் கொடுப்பார் என்பதை விளக்க ஒரு சுவாரசியமான குட்டிக்கதை ஒன்றைக் கூறினார்.
"ஒரு பெரிய பணக்கார வீட்டு முதலாளியிடம் இருவர் வேலை செய்கிறார்கள். அதில் ஒருவர் எப்போதும் தன் வேலையை மட்டும் நேர்த்தியாகப் பார்ப்பார். மற்றொருவர் வேலையைச் செய்யாமல், முதலாளியிடம் எப்போதும் 'சார் நீங்க சூப்பரா இருக்கீங்க' என ஜால்ரா அடித்துக் கொண்டே இருப்பார். ஒருநாள் வெளியூர் சென்ற ஓனர், ஜால்ரா அடித்தவருக்குச் வெறும் சம்பள உயர்வை மட்டும் கொடுத்துவிட்டு, உண்மையாக உழைத்தவருக்கு ஒரு வீட்டையே பரிசாகக் கொடுத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றார். எனவே, நாம் உண்மையாக உழைத்தால் கடவுள் நமக்கான பலனைத் தருவார்" என்று குறிப்பிட்டார். மேலும், "திருச்சி கிழக்கில் நான் போட்டியிட வேண்டுமென்றால், நான் அரசியலுக்கு வர வேண்டும்" என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் ரஜினி அரசியல் வரை:
தான் நீண்ட காலமாகப் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து, கஷ்டப்படுபவர்களுக்கு உதவி வந்ததை நினைவு கூர்ந்த அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அங்குச் சென்று உணவு வழங்கியதுதான் தனது அரசியல் சிந்தனையின் தொடக்கமாக அமைந்தது என்றார்.
மேலும், "அரசியல் ரீதியாக ரஜினி குறித்து சீமான் நிறைய விமர்சனங்களை முன்வைத்தபோது, நான் ரஜினியிடம் சென்று, 'அண்ணே அவர் ஓவரா பேசுறார்' எனக் கூறினேன். ஆனால் ரஜினியோ என்னை அமைதியாக இருக்கச் சொன்னார். தொடர்ந்து ரஜினி தன் அரசியல் என்ட்ரியை அறிவித்தபோது, நானும் அரசியலுக்கு வருவதாக அவரிடம் கூறினேன். நாம் அரசியலில் வென்றால் இன்னும் பெரிய அளவில் ட்ரஸ்ட் (Trust) கட்டி மக்களுக்கு உதவலாம் என என் தம்பிகள் கூறினார்கள்" என்றார்.
"அரசியல் சாக்கடை" - தடுத்த தாய்; மாற்றிய விஜய்!
அரசியல் வருகை குறித்து ராகவா லாரன்ஸ் தனது தாயிடம் கூறியபோது, அவர் முகம் சட்டென மாறி, இரண்டு மூன்று நாட்கள் பேசாமல் இருந்துள்ளார். "அரசியல் ஒரு சாக்கடை" என்று கூறிய அவரது தாய், ரஜினியிடமே நேரடியாகச் சென்று இதனைச் சொல்லப் போவதாகக் கூறியுள்ளார். அந்த நேரத்தில் கொரோனா பேரிடர் வந்து எல்லாமே முடங்கியதால், தான் அரசியலுக்கு வரவில்லை என ரஜினி அறிவித்தார். "அதைக் கேட்டு நாங்கள் தலைமேல் கை வைத்து உட்கார்ந்துவிட்டோம். ரஜினியைச் சந்தித்துப் பேசியபோது, மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என அவர் மிகவும் வருத்தப்பட்டார்" என்று லாரன்ஸ் உருக்கமாகத் தெரிவித்தார்.
அதன் பிறகு, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். "உடனே நான் என் ட்ரஸ்ட்டிற்குச் சென்று, 'நண்பர் (விஜய்) வருகிறார்' எனக் கூறி அதற்கான வேலைகளைத் தொடங்கினேன். விஜய் ஒரு மிகக்கடின உழைப்பாளி. அப்போதும் என் அம்மாவிடம் நான் அரசியல் குறித்துக் கேட்டபோது, வேண்டாம் என்று விஜயிடமே கூறிவிட்டார். ஆனால், சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதும், என் அம்மாவின் மனம் மாறியது. 'விஜய் எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்' எனக் கூறிய என் அம்மா, தற்போது நான் அரசியலுக்குள் நுழைவதற்குப் பச்சைக்கொடி காட்டி, அனுமதி கொடுத்துவிட்டார்" என்று லாரன்ஸ் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
"ரசிகர்கள் தான் என் தெய்வம்" - யாருடன் கூட்டணி?
"என் தாய்க்கு நிகராக என் ரசிகர்களை நான் நினைக்கிறேன். அம்மா ஓகே சொல்லிவிட்டாலும், நான் அரசியலுக்கு வரலாமா? அந்த தகுதி எனக்கு இருக்கிறதா? என்பதை நீங்கள் தான் கமெண்ட்ஸில் சொல்ல வேண்டும். அதேபோல் நான் அரசியலுக்கு வந்தால் யாருடன் சேர வேண்டும் என்பது குறித்தும் மக்களின் கருத்துக்களைக் கேட்க விரும்புகிறேன். ஒருவேளை மக்கள் 'வேண்டாம்' என்று சொன்னால் நான் அரசியலுக்கு வரமாட்டேன்; எப்போதும் போல என் சமூக சேவையைத் தொடர்ந்து செய்வேன்" என்று ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும், தேர்தல் வெற்றிகளும் ராகவா லாரன்ஸின் தாயை மனம் மாறச் செய்து, லாரன்ஸின் அரசியல் என்ட்ரிக்கு வழிவகுத்துள்ளது என்ற இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

No comments
Thank you for your comments