அரசியல் மேடை முதல் அமைச்சர் நாற்காலி வரை: தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் அவர்களின் முழு வாழ்க்கைச் சுருக்கம்!
காஞ்சிபுரம் | மே 21, 2026
பிறப்பு மற்றும் குடும்ப பின்னணி:
- சொந்த ஊர்: காஞ்சிபுரம் அருகே உள்ள முத்தியால்பேட்டை ஆகும்.
- வயது: 50
- குடும்பம்: இவரது மனைவி திருமதி பிரேமா அவர்கள் மக்கள் பணியில் ஈடுபட்டு, தற்போது வாலாஜாபாத் ஒன்றிய குழு உறுப்பினராக (Union Councillor) இருந்து வருகிறார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
அரசியல் பயணம் மற்றும் வகித்த பதவிகள்:
திரு. ஆர்.வி. ரஞ்சித் குமார் அவர்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகத் தமிழக அரசியலில் தீவிரமாக இயங்கி வருபவர். பல்வேறு காலகட்டங்களில் முக்கியக் கட்சிகளில் இணைந்து மக்கள் பணியாற்றியுள்ளார்:
- உள்ளாட்சித் துறை வெற்றி: கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முதன்முதலாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராகப் பதவி வகித்தார். இதுவே அவரது மக்கள் பிரதிநிதித்துவப் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
- அரசியல் பதவிகள்: காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக), அண்ணா திமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் (ஓபிஎஸ் அணி) மற்றும் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய எம்ஜிஆர் அண்ணா திமுகவில் மாநில பொதுச் செயலாளர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து அரசியல் களத்தில் பக்குவப்பட்டார்.
- 2021 சட்டப்பேரவை தேர்தல்: கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உத்தரமேரூர் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டார். எனினும், அந்தத் தேர்தலில் இவருக்கு வெற்றி வாய்ப்பு கைக்கூடவில்லை.
மக்கள் செல்வாக்கும் த.வெ.க. வெற்றியும்:
கட்சிகளைத் தாண்டி தனது சொந்த செலவில் ஏழை, எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சமூகப் பணிகளையும் தொடர்ந்து செய்து வந்ததன் மூலம் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே தனிப்பட்ட முறையில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தார்.
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் காஞ்சிபுரம் தொகுதியில் களம் இறங்கினார். இத்தொகுதியில் அண்ணா திமுக சார்பில் போட்டியிட்ட முன்னணித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரத்தை விட 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
வனத்துறை அமைச்சராகப் புதிய பொறுப்பு:
சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களின் குறைகளைக் கேட்க மருத்துவமனைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில், முதல்வர் விஜய்யின் அமைச்சரவை விரிவாக்கத்தில் இவருக்கு தமிழக வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று (மே 21) ஆளுநர் மாளிகையில் முறைப்படி அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட இவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments