மதுபோதையில் மருமகன் வெறிச்செயல் - மாமனார் குத்திக்கொலை - மாமியாருக்கும் கத்திக்குத்து!
விருத்தாசலம் | ஏப்ரல் 20, 2026
சம்பவத்தின் பின்னணி:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (50). இவரது மகள் கனிமொழியை, வடவாடியைச் சேர்ந்த காந்தி (41) என்பவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது இவர்கள் விருத்தாசலம் பூதாமூர் பகுதியில் வசித்து வந்தனர்.
காந்திக்கும் கனிமொழிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு கனிமொழி, தனது தந்தை செல்வமணி வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார்.
மதுபோதையில் நேர்ந்த அசம்பாவிதம்:
இந்நிலையில், இன்று மதுபோதையில் கார்குடல் கிராமத்திற்குச் சென்ற காந்தி, தனது மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை மாமனார் செல்வமணி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காந்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வமணியின் மார்பில் சரமாரியாகக் குத்தினார்.
இரத்த வெள்ளத்தில் சரிந்த செல்வமணியைக் காப்பாற்ற ஓடிவந்த மாமியார் லதா (50) என்பவரையும் காந்தி கத்தியால் குத்தினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கனிமொழி, அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து உயிர் தப்பினார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:
அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமணி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த லதா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை:
தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர், தலைமறைவாக முயன்ற காந்தியைப் பிடித்துக் கைது செய்தனர். குடும்பத் தகராறில் மருமகனே மாமனாரைக் கொன்ற சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: R. காமராஜ்
No comments
Thank you for your comments