ஒரங்கூர் இளைஞர் மரணம்: போலீசுக்குத் தெரியாமல் உடல் அடக்கம்? சிறுபாக்கம் போலீஸ் வழக்குப் பதிவு!
சிறுபாக்கம் | ஏப்ரல் 05, 2026
சம்பவத்தின் பின்னணி:
ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த திருமாவளவன் (26) என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளாக துபாயில் பணியாற்றிவிட்டு, கடந்த ஜனவரி 15, 2026 அன்று சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ஒன்றரை மாதங்கள் வீட்டில் இருந்தவர், பின்னர் கேரளாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு வேலை பிடிக்காததால் மீண்டும் ஊருக்கே திரும்பிய திருமாவளவன், கடந்த மார்ச் 22-ஆம் தேதி இரவு தனது தந்தையிடம் வெளியே செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை (மார்ச் 23), ஒரங்கூர் - மங்களூர் சாலையில் உள்ள காசி முனியப்பர் கோவில் மணி கட்டும் கம்பியில், திருமாவளவன் தனது வேஷ்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
சட்ட விதிமீறல் மற்றும் புகார்:
திருமாவளவன் உயிரிழந்தது குறித்து காவல்துறைக்கோ அல்லது வருவாய்த் துறைக்கோ எந்தவிதத் தகவலும் தெரிவிக்காமல், அன்றைய தினமே (மார்ச் 23) மாலையில் அவரது தந்தை சின்னசாமி மற்றும் உறவினர்கள் உடலை மயானத்தில் புதைத்து அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தந்தை சின்னசாமி தற்போது கூறியதையடுத்து, ஒரங்கூர் கிராம நிர்வாக அலுவலர் (VAO) திரு. மோசஸ் ராஜ் (30) இது குறித்து சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறை நடவடிக்கை:
கிராம நிர்வாக அலுவலரின் புகாரைப் பெற்றுக்கொண்ட சிறுபாக்கம் போலீசார், Cr/no: 47/2026 U/S BNSS மற்றும் 238 BNS Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யார் மீது வழக்கு? முறையான தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்த குற்றத்திற்காக, இறந்தவரின் தந்தை சின்னசாமி (61) மற்றும் அவரது உறவினர்கள் மீது இந்த வழக்குப் பாயந்துள்ளது.
தொடரும் விசாரணை:
ஏற்கனவே வட்டாட்சியர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை முடிந்துள்ள நிலையில், இந்த வழக்கில் திருமாவளவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன? தந்தை ஏன் முதலில் உடலை ரகசியமாக அடக்கம் செய்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: R. காமராஜ்
No comments
Thank you for your comments