Breaking News

"அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்": காஞ்சியில் த.வெ.க. வேட்பாளர் ஆர்.வி. ரஞ்சித்குமார் அதிரடி வாக்குறுதி!

 காஞ்சிபுரம் | ஏப்ரல் 15, 2026

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.வி. ரஞ்சித்குமார், இன்று காஞ்சிபுரம் மாநகரப் பகுதிகளில் குதிரைகள் பூட்டிய சாரட் வாகனத்தில் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

நெசவாளர்களுடன் கலந்துரையாடல்:

பிள்ளையார்பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்ட ரஞ்சித்குமார், அங்குள்ள நெசவாளர் இல்லம் ஒன்றில் பட்டுச் சேலை நெய்யும் முறையை ஆர்வமுடன் கேட்டறிந்தார். மேலும், அவரே தறியில் அமர்ந்து நெசவு நெய்து பார்த்ததுடன், நூல் விலை உயர்வு மற்றும் நெசவாளர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மக்களுடன் ஒருவராகப் பிரச்சாரம்:

ராஜாஜி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, அங்கிருந்த காய்கறிக் கடையில் அமர்ந்து பொதுமக்களுக்குக் காய்கறிகளை எலக்ட்ரானிக் தராசில் எடை போட்டுக் கொடுத்து சுவாரசியமாக வாக்குக் கேட்டார். காந்தி சாலை, மூங்கில் மண்டபம், பழைய ரயில் நிலையச் சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் அவருக்குத் த.வெ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முக்கிய வாக்குறுதிகள்:

பிரச்சாரத்தின் போது ரஞ்சித்குமார் பேசியதாவது:

  • மருத்துவமனை தரம் உயர்வு: "ஏழை, எளிய மக்கள் அதிகம் சார்ந்திருக்கும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை, அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாகத் தரம் உயர்த்துவேன்."
  • போக்குவரத்துத் தீர்வு: "நகரின் முக்கியப் பிரச்சனையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, முக்கிய இடங்களில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் (Multi-level Car Parking) அமைக்கப்படும்."
  • நேரடித் தொடர்பு: "தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் என்னைத் தொலைபேசியில் அழைக்கலாம்; உங்கள் குறைகளைத் தீர்க்க உடனடியாக ஓடோடி வருவேன்."

"மாற்றத்திற்கான இந்த விசில் சத்தம் காஞ்சிபுரத்தில் ஒலிக்க வேண்டும்" எனக்கூறி, தனக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

No comments

Thank you for your comments