"காலை 11 முதல் மாலை 4 மணி வரை மேய்ச்சலைத் தவிர்க்கவும்": கால்நடைகளைப் பாதுகாக்கக் காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவுறுத்தல்!
காஞ்சிபுரம் | ஏப்ரல் 11, 2026
வெப்ப அயற்சியின் அறிகுறிகள்:
கால்நடைகளுக்கு வெப்பம் அதிகமாகும் போது கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும்:
- அதிகப்படியான உமிழ்நீர் வடிதல் மற்றும் தாகம்.
- வாயைத் திறந்த நிலையில் வேகமாகச் சுவாசித்தல்.
- பகலில் தீவனம் உட்கொள்வது குறைதல் மற்றும் நிழலைத் தேடிச் செல்லுதல்.
ஆட்சியர் வழங்கிய முக்கிய ஆலோசனைகள்:
1. கறவை மாடுகள் மற்றும் எருமைகள்:
- மேய்ச்சல் நேரம்: காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதைத் தவிர்க்க வேண்டும். வெயிலுக்கு முன்பே மேய்ச்சலை முடிக்க வேண்டும்.
- தண்ணீர் வசதி: ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறையாவது தண்ணீர் வழங்க வேண்டும். தண்ணீரில் சிறிதளவு கலப்பு தீவனம் தூவுவதன் மூலம் மாடுகளை அதிக தண்ணீர் குடிக்கத் தூண்டலாம்.
- பராமரிப்பு: கொட்டகைகளில் மின்விசிறிகள் அல்லது நீர்த்தெளிப்பான்களைப் பயன்படுத்தலாம். எருமைகளை வெயில் நேரங்களில் குளியல் தொட்டிகளில் விடுவது சிறந்தது.
2. ஆடு வளர்ப்பு:
- தண்ணீர்: ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு 8 முதல் 12 லிட்டர் சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும்.
- சத்துக்கள்: பட்டிகளில் உப்பு கட்டிகளை (Salt licks) கட்டுவதன் மூலம் சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் ஆடுகளுக்குக் கிடைக்கும்.
- தடுப்பூசி: அம்மை மற்றும் ஆட்டுக்கொல்லி நோய்களுக்கான தடுப்பூசிகளை உரிய காலத்தில் போட வேண்டும்.
3. கோழிப் பண்ணைகள்:
- தீவனம்: கோழிகளுக்கு விடியற்காலையிலும் இரவிலும் தீவனம் வழங்க வேண்டும். குடிநீரில் பி-காம்ப்ளக்ஸ் மற்றும் குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம்.
- இடவசதி: உயரமான கூரை அமைத்து, அதிக இடவசதி உள்ள இடத்தில் குறைவான கோழிகளைப் பராமரிக்க வேண்டும்.
பொருளாதார இழப்பைத் தவிர்க்க வேண்டுகோள்:
"மேற்கண்ட பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் பால் மற்றும் முட்டை உற்பத்தி குறைபாட்டைத் தடுத்து, விவசாயிகள் பொருளாதார இழப்புகளைத் தவிர்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகலாம்," என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments