Breaking News

காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றம் அதிரடி: விபத்தில் பலியான அதிகாரி குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு!


 காஞ்சிபுரம் | மார்ச் 14, 2026

காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.


வழக்கின் பின்னணி:

செங்கல்பட்டு மாவட்டம் மேலவளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (37), ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். கடந்த 10.03.2025 அன்று மதுராந்தகம் பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, கார் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான இழப்பீடு கோரி அவரது மனைவி கன்னிகா (31) தொடர்ந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ரூ.1 கோடி இழப்பீடு:

இந்த வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) எஸ். மோகனகுமாரி, உயிரிழந்த மோகனின் குடும்ப நிலையை உணர்ந்து, நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.1,00,00,000 (ஒரு கோடி) காசோலையை இழப்பீட்டுத் தொகையாக வழங்கினார்.

மக்கள் நீதிமன்றத்தின் சாதனைகள்:

இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோகனகுமாரி தலைமையில், நீதிபதிகள் எஸ். சுஜாதா, தி. ஜெயஸ்ரீ, கே.எஸ். அருண்சபாபதி ஆகியோர் முன்னிலையில் ஆயிரக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன:

  • மொத்த வழக்குகள்: 4,005 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 806 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
  • ஒட்டுமொத்த இழப்பீடு: இதன் மூலம் மொத்தம் ரூ.5,92,12,914 இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது.
  • வங்கி வழக்குகள்: 2,756 வங்கி கடன் தொடர்பான வழக்குகளில் 162 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.96,47,862 வசூலிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் டி. திருமால், இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments