Breaking News

'குந்தவை' சர்ச்சை: "இது அறிவில்லாத பேச்சு" - திரிஷா ஆக்ரோஷம்... வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்திபன்

 சென்னை | மார்ச் 09, 2026

சினிமா உலகில் தனது சிலேடைப் பேச்சால் புகழ்பெற்ற நடிகர் பார்த்திபனின் ஒரு கருத்து, நடிகை திரிஷாவைச் சீண்டிய நிலையில், அது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.


சர்ச்சையின் பின்னணி:

சமீபத்தில் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி வீட்டுத் திருமண விழாவில் நடிகர்கள் விஜய் மற்றும் திரிஷா ஒன்றாகக் கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்தது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் 'ரேபிட் ஃபயர்' கேள்வியின் போது திரிஷாவின் புகைப்படம் காட்டப்பட்டு, "உங்கள் குந்தவை பற்றிச் சொல்லுங்கள்" எனக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பார்த்திபன், "இந்தக் குந்தவையை சில நாட்களுக்கு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வைப்பது (குந்த வைப்பது) நல்லது. அது தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும்" எனத் தனது பாணியில் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

திரிஷாவின் அதிரடிப் பதிலடி:

பார்த்திபனின் இந்த "குந்த வைப்பது" (உட்கார வைப்பது) என்ற இரட்டை அர்த்தக் கிண்டல் திரிஷாவைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இது குறித்து தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்ட திரிஷா:

"மைக்கில் பேசுவதால் முட்டாள்தனமான கருத்துக்கள் எல்லாம் சரியாகிடாது. இது போன்ற அறிவில்லாத வார்த்தைகள், பேசப்படுபவரை விடப் பேசுபவரின் உண்மையான சுயரூபத்தையே காட்டும்."

எனப் பெயர் குறிப்பிடாமல் பார்த்திபனுக்குத் தக்க பதிலடி கொடுத்தார்.


வருத்தம் தெரிவித்த பார்த்திபன்:

சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, பார்த்திபன் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், "வார்த்தை ஜாலத்திற்காக நான் பேசியது குந்தகமாக முடிந்துவிட்டது. தவறாக நடந்த இந்தச் சூழலுக்கு வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை" எனக் கூறித் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஒரு மூத்த கலைஞரின் பேச்சும், அதற்குப் முன்னணி நடிகையின் எதிர்வினையும் கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.


No comments

Thank you for your comments