பெண்ணாடம் அருகே கோர விபத்து: போதை ஓட்டுநரின் அராஜகம் - தந்தை, மகன் துடிதுடித்து பலி! பள்ளி வாகனம் மோதிய பகீர் சம்பவம்.
விருத்தாசலம் | டிசம்பர் 22, 2025 :
விபத்து நடந்தது எப்படி?
பெண்ணாடம் சோழன் நகரைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் வேல் (38), ஜெயசக்தி மழலையர் பள்ளிக்குச் சொந்தமான வாகனத்தை இன்று காலை ஓட்டிச் சென்றுள்ளார். பெண்ணாடம் - கோனூர் கிராம சாலையில், திருமலை அகரம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனம் வந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது.
தந்தை - மகன் பலி:
இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த திருமலை அகரத்தைச் சேர்ந்த மதியழகன் (45) மற்றும் அவரது மகன் மனோஜ் (25) ஆகிய இருவருக்கும் தலை மற்றும் உடல் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மதுபோதையில் டிரைவர்:
தகவலறிந்து வந்த பெண்ணாடம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஓட்டுநர் வேலிடம் நடத்திய சோதனையில், அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்தனர்.
சோகத்தில் கிராமம்:
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டிய வாகனத்தை மதுபோதையில் இயக்கி, இரு உயிர்களைப் பறித்த ஓட்டுநரின் செயல் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்தது திருமலை அகரம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.
No comments
Thank you for your comments