தேவரியம்பாக்கத்தில் கிராம சபைக் கூட்டம்-மத்திய அரசு அதிகாரிகள் பாராட்டு
காஞ்சிபுரம், நவ.2:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ம.த.அஜய்குமார் தலைமையில் நடைபெற்றது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ், சாந்தி, உதவித் திட்ட அலுவலர் தண்டாபணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார்.கூட்டத்தில் கிராம மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி புறக்காவல் நிலையம் மற்றும் சமுதாயக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் புதுதில்லியை சேர்ந்த மத்திய அரசின் ஐ.எஸ்.டி.எம் பயிற்சி மற்றும் மேலாண்மை செயலக நிறுவனத்தின் 7 பிரதிநிதிகள் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
மூத்த தொல்லியல் ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன்,முன்னாள் பேராசிரியர் ஜவஹர் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இவர்கள் ஊராட்சியில் வளர்க்கப்பட்டுள்ள குறுங்காடுகள், பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்டள்ள வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியனவற்றையும் பார்வையிட்டனர்.
இதன் பின்னர் மத்திய அரசு குழுவினர் ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதாகவும்,பொதுமக்களும் ஆர்வத்துடன் அதிக அளவில் பங்கேற்று விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதையும் பாராட்டினர்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவிப் பொறியாளர் கயல்விழி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எல்லப்பன்,பாளையம் ரவி மற்றும் வார்டு உறுப்பினர்கள்,கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments