Breaking News

விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள் - காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள்

காஞ்சிபுரம், அக்.18:

விபத்தில்லாமலும்,காற்று மாசு படாமலும் தீபாவளியை கொண்டாடி மகிழுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது..

தீபாவளித் திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாளாகும்.அதே வேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம்,நீர்,காற்று ஆகியன  பெருமளவில் மாசுபடுகின்றன.

பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் குழந்தைகள், பெரியோர்கள்,மற்றும் நோய் வாய்ப்பட்டுள்ள முதியோர்கள் உடலளவிலும்,மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.



மாண்புமிகு உச்சநீதிமன்றம் பசுமைப்பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யுமாறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.மேலும், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.



நிகழாண்டு தீபாவளிப்பண்டிகையை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.



 குறைந்த ஒலி மற்றும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும்.பொதுமக்கள் ஒன்றாக கூடி திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலமாக முயற்சி மேற்கொள்வது நலம்.

தொடர்ச்சியாக வெடிக்க கூடியதும்,அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், அமைதி காக்க வேண்டிய இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்து விடுங்கள். 


குடிசைப்பகுதிகள்,எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பில்லாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து தீபாவளியை மாசற்ற தீபாவளியாக கொண்டாடி மகிழுங்கள்.பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனவும் ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments