Breaking News

விருத்தாசலத்தில் கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

📍 விருத்தாசலம் |  

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இரச்சகாளியம்மன் கோவில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவிலை அதே பகுதியைச் சேர்ந்த பூசாரிகள் வெங்கடேசன் மற்றும் ராஜேந்திரன் பராமரித்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று பூட்டிவிட்டு வீடு சென்ற அவர்கள் இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தபோது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, சாமிக்கு உரிய பூஜை பொருட்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்து மூன்று ஜோடி வெள்ளி கண்மலர், நெத்திப்பட்டை, மூக்குப்பட்டி மற்றும் பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ₹40,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கோவில் கதவின் பூட்டை உடைக்க பயன்படுத்திய கடப்பாரை மற்றும் உடைக்கப்பட்ட பூட்டு அருகே கிடந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அருகில் CCTV கேமராக்கள் இல்லாததால், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


✍️ செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
📸 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545

No comments

Thank you for your comments