Breaking News

சிருனை பெருகல் ஊராட்சியில் பழமையான பெண் தெய்வச்சிலை கண்டறியப்பட்டுள்ளது


காஞ்சிபுரம்,செப்.30:

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே சிருனை பெருகல் ஊராட்சியில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான பெண் தெய்வச்சிலை ஒன்று வரலாற்று ஆய்வாளர் மா.த.அஜய்குமார் செவ்வாய்க்கிழமை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.



இச்சிலை குறித்து அவர் மேலும் கூறியது..

அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ள இச்சிலை வளமையின் தெய்வத்தை உணர்த்தும் வகையில் பருத்த வயிறும்,செழித்த மார்பகங்களும், தனித்துவமான கிரீடமும் உள்ளது. காலப்பழமையின் காரணமாக சிற்பத்தின் நுட்பமான வேலைப்பாடுகள் சற்று சிதைந்திருக்கின்றன.

இச்சிலை துக்கச்சியம்மன் என்று பக்தியுடன் வழிபடப்பட்டு வந்துள்ளதும் ஆய்வில் தெரிய வருகிறது.1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கி.பி.7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் இது தவ்வை என அழைக்கப்படும் ஜேஷ்டா தேவியின் சிற்பம் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சிலையின் அமைப்பை பார்க்கும் போது இது காலத்தால் மிகவும் முந்தியது மற்றும் அபூர்வமானது என மூத்த வரலாற்று ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தாய் தெய்வ வழிபாட்டின் மிக முக்கியமான பகுதியாக தவ்வை வழிபாடு பல்லவர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்ச்சமூக மரபில் இருந்து வந்துள்ளது.

பல்லவர் காலத்தில் உச்சத்திலிருந்த இந்த வழிபாடு சோழர் காலத்தில் கோயில்களின் தென் மேற்குப்பகுதியில் அமைக்கப்பட்டும் வழிபாடு செய்யப்பட்டுள்ளது. நந்தி வர்ம பல்லவனின் குல தெய்வமாகவும் தவ்வை விளங்கியுள்ளார். 

வளமையின் சின்னமான தவ்வை 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இதன் வழிபாடு சரிவைச் சந்தித்தாலும்,சிருனை பெருகல் போன்ற இடங்களில் இன்றும் வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் ஜேஷ்டா தேவி, சேட்டா தேவி, மாமுகடி, பழையோள், காக்கை கொடியாள், ஏகவேணி போன்ற பல பெயர்களாலும் அழைக்கப்பட்டுள்ளார்.

ஜேஷ்டா என்றால் சமஸ்கிருதத்தில் முதல் என்றும் சேட் என்றால் தமிழில் பெரிய என்றும் பொருள்படும்.பொதுவாக தவ்வை சிலைகள் மகன் குளிகன்,மகள் மாந்தி ஆகியோருடன் கழுதையை வாகனமாகவும், காகத்தைக் கொடியாகவும்,துடைப்பத்தையும் கொண்டதாகவே இருக்கும்.ஆனால் இச்சிலையில் தவ்வை மட்டுமே தனியாக காட்சி தருகிறார்.இது செழிப்பின் தத்துவத்தை சொல்லும் சிறப்பு வாயந்த அம்சமாகும்.

ஜேஷ்டா தேவி(மூத்த தேவி) உரத்தின் அடையாளமாகவும், இளையவள் ஸ்ரீதேவி(லட்சுமி)நெற்கதிரின் அடையாளமாகவும் கருதப்படுகின்றனர்.

இது உழைக்கும் வலிமை,வளமை மற்றும் நிலத்தின் வளம் ஆகியனவற்றை முதன்மைப்படுத்தும் ஆதித்தமிழனின் தத்துவத்தை உணர்த்துகிழது.

சங்க இலக்கியங்களில் கொற்றவைக்கு அடுத்தபடியாக அதிகம் பாடப்பட்ட தெய்வம் தவ்வை தான். திருவள்ளுவர், அவ்வையார், கம்பர் போன்ற புலவர்களும் தவ்வையைப் பற்றிகுறிப்பிட்டுள்ளது.

இது போன்ற அரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்பங்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்பதும் இப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளதாக மா.த.அஜய்குமார் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments