Breaking News

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை தோறும் நலன்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்படும் - ஆட்சியர்

காஞ்சிபுரம், ஆக.2:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்படும் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை தெரிவித்தார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தொடக்கி வைத்தார்.


பின்னர் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

இதன் பின்னர் அவர் கூறியதுநலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் மருத்துவ ஆலோசனைகள்,மருத்துவச் சேவைகள் ஆகியன சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்படுகின்றன.


இம்முகாமானது வாரம் தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும்.முகாமில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனைகளும் செய்யப்படும்.

நீரழிவு நோய், ரத்த அழுத்தம், மின் இதய வரைபடம், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முதலிய பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

புற்றுநோய், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. இவை தவிர மேலும் 15 துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

40 வயதுக்கு மேற்பட்ட இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடைபெறுகிறது. 

எனவே பொதுமக்கள் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டார்.

முகாமில் சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநர் நளினி,மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில், உத்தரமேரூர் ஒன்றியக் குழுவின் தலைவர் ஹேமலதா ஞானசேகர் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,மருத்துவக் குழுவினர், அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Nalan Kaakkum Stalin Health Camp – Kanchipuram Weekly Medical Initiative

No comments

Thank you for your comments