Breaking News

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை - மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

புது டெல்லி, ஜூலை 29-

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும், நேற்று (ஜூலை 28) நடைபெற்ற ஆபரேஷன் மகாதேவ் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார்.



பஹல்காம் கொடூர தாக்குதல் :

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்:

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் :

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அதேவேளை, ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை:

அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று உரையாற்றினார். அதேவேளை, நேற்று மதியம் காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதிகள்தான் பஹல்காம் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புப்படையினர் நேற்று தெரிவித்தனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் :

இந்நிலையில்,  ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று பதில் அளித்தார். அவர் தெரிவித்ததாவது: 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. அப்பாவி மக்களிடம் மதத்தைக் கேட்டு சுட்டுக்கொன்ற காட்டுமிராண்டிகளின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவம், துணை ராணுவப் படை, ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியவற்றின் கூட்டு நடைவடிக்கையில், சுலேமான் என்கிற ஃபைசல், ஆஃப்கன், ஜிப்ரன் ஆகிய 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

சுலேமான், ஆஃப்கன், ஜிப்ரன் ஆகிய 3 பயங்கரவாதிகளம் லஷ்கர் இ தொய்பாவின் ஏ பிரிவு தளபதியாக செயல்பட்டவர்கள். இந்த தாக்குதல் மூலம், பஹல்காமில் நமது மக்களை கொலை செய்த 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு வந்த பிறகு, பாதுகாப்பு ஏஜென்சிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள்.

எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி அடையவில்லை :

பஹல்காம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற செய்தியை கேட்டவுடன் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) மகிழ்ச்சி அடைவார்கள் என நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான் சந்தித்தேன். திருமணமான 6 நாட்களில் விதவையான ஒரு பெண் என் முன் நின்றார். அந்த காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பயங்கரவாதிகளை அனுப்பியவர்களை பிரதமர் மோடி தீர்த்துக் கட்டினார். 

பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களை இன்று நமது பாதுகாப்புப் படையினர் தீர்த்துக் கட்டியுள்ளனர். இதை அனைத்து குடும்பங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். உணவு வழங்கியவர்கள் தடுப்புக் காவலில் உள்ளனர். இவர்கள்தான், பயங்கரவாதிகளின் உடல்களை அடையாளம் காட்டியவர்கள். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மூலம் அவர்களின் தோட்டாக்கள் குறித்த அறிக்கை ஏற்கனவே தயாராக இருந்தது.

துப்பாக்கிகள் பரிசோதனை :

நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளை பரிசோதனை செய்ததில், தோட்டாக்கள் குறித்த அறிக்கை பொருந்தி இருக்கிறது. இது தொடர்பாக சண்டிகரில் மேலும் ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகே, இறந்தவர்கள் மூவரும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

3 Terrorists Involved in Pahalgam Attack Killed in Operation Mahadev – Amit Shah Informs Lok Sabha

 

No comments

Thank you for your comments