காஞ்சிபுரத்தில் பெண் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை
காஞ்சிபுரம், ஜூலை 28:
சம்பவ விவரம்:
காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் ஊராட்சியில் உள்ள கரியன் கேட் பகுதியைச் சேர்ந்த காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ் (35) என்பவரின் மனைவி அஸ்வினி (29).
அவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், ஜூலை 24ஆம் தேதி மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, தலையில் கடுமையான காயமடைந்தார்.
அவசரமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனக் கூறி, அஸ்வினியின் உறவினர்கள்,
“குற்றவாளிகள் கைது செய்யப்படாத வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம்”என வலியுறுத்தி, காவல் நிலையத்துக்கு முன்பாக அமர்ந்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸார் சமாதானம்:
பொன்னேரிக்கரை காவல் நிலைய போலீசார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்ய முயன்றனர்.
குற்றவாளி கைது:
இந்த நிலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரம் பகுதியைச் சேர்ந்த என்.எஸ்.கே.நகர் குடியிருப்பாளரான தமிழ்வாணன் (28) என்பவர், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர் எனக் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டதாக காவல் துறை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
No comments
Thank you for your comments