உத்தரமேருர் அருகே தார் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து
காஞ்சிபுரம், ஜூலை 11:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புலிவனத்திலிருந்து களியாம்பூண்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் நெமிலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான சாலைகள் போடுவதற்கு தேவையான தார் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.
உத்தரமேரூர் அருகே அழிசூர் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த இத்தொழிற்சாலையில் வழக்கம் போல சம்பவ நாளன்றும் தார் உருக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதிக வெப்பம் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து உத்தரமேரூர் தீயணைப்பு அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
தீ விபத்தால் தார் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் பல லட்சம் மதிப்பிலானவை சேதமடைந்ததாகவும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லையெனவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments