Breaking News

காஞ்சிபுரத்தில் ஆசிரியர்கள் சாலை மறியல் - 120 பெண்கள் உட்பட 185 பேர் கைது

காஞ்சிபுரம், ஜூலை 17:

காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 120 பெண்கள் உட்பட மொத்தம் 185 பேர் கைது செய்யப்பட்டனர்.


காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக் அமைப்பின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முதலாவதாக ஆர்ப்பாட்டமும், அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் ஜான் வெஸ்லி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

காஞ்சிபுரம் நகரின் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சாலை மறியல் செய்தமைக்காக 120 பெண்கள் உட்பட 185 பேரைக் கைது செய்தனர்.

No comments

Thank you for your comments