தொழிற்சாலைகளில் மனிதவளத் தேவை அதிகமாக இருக்கிறது - காஞ்சிபுரம் ஆட்சியர் பேச்சு
காஞ்சிபுரம், மார்ச்.5:
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான திறன் பயிற்சிக்காக பதிவு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.முகாமிற்கு சார் ஆட்சியர் ஆஷிக்அலி,ஆட்சியர்(பயிற்சி) ந.மிருணாளினி,மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி,கல்லூரி முதல்வர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் க.ஜெயஸ்ரீ வரவேற்று பேசினார்.விழாவில் ஆட்சியர் மேலும் பேசுகையில் அரசு பல நல்ல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அவையனைத்தும் மக்களிடம் போய்சேருகிறதா என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
கல்லூரிகளில் அதிகமானவர்கள் படிக்கிறார்கள்.ஆனால் படிக்கிற அனைவரும் வேலைக்கு போவது என்பது குறைவாக உள்ளது.படித்தவர்கள் அனைவரையும் வேலைக்கு போக வைத்து பொருள் ஈட்டுவதற்கான வழிவகையை தேடி தரும் திட்டமே நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டம்.
அது மட்டுமில்லாமல் படித்தவர்களை மேலும் திறமையானவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமுமாகும்.இத்திட்டத்தின் பயன்களை தெளிவாக தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு தெரிவியுங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4000 தொழிற்சாலைகள் உள்ளது. இவையனைத்துக்கும் மனித வளத் தேவையும் அதிகமாக இருக்கிறது.தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்றவாறு திறமையானவர்கள் இல்லாமல் இருப்பதாகவும்,அரசு திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஆட்சியர் பேசினார்.
நிறைவாக கல்லூரி மாணவியர்களுடன் கலந்துரையாடினார். புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற கல்லூரி மாண வைஷ்ணவியையும் ஆட்சியர் பாராட்டினார்.
No comments
Thank you for your comments