காஞ்சிபுரம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளியின் பொன்விழா - ஆட்சியர் தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம், பிப்.25:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சதாவரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.கடந்த 30.7.1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியின் 50 வது ஆண்டு பொன் விழாவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடக்கி வைத்தார்.
பின்னர் அப்பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு பரிசுகளையும் வழங்கி பேசியதாவது..
காஞ்சிபுரம் சதாவரத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி ஒரு உண்டு, உறைவிடப்பள்ளியாகும்.இப்பள்ளிக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
மாணவர்களின் கேட்கும் திறன் குறைவுக்கு ஏற்றவாறு செவித்துணை கருவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.விலையில்லா புத்தகம்,நோட்டுகள்,புத்தகப்பை,விலையில்லா சீருடைகள் ஆகிய அனைத்தும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
ஒன்று முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ரூ.2 ஆயிரமும்,6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ரூ.6 ஆயிரமும்,9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.8 ஆயிரமும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்றவாறு சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்.உதட்டசைவு,ஒலி கேட்டல் பயிற்சி ஆகிய செவித்துணை கருவிகளின் உதவியோடு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பள்ளியில் கணினி வழி சாதனங்களைக் கொண்டும் கல்வி கற்பிக்கப்படுகிறது.விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு சரிவிகித சத்துணவும், அடிப்படை தேவைகளுக்குமாக மாதம் தோறும் ரூ.1400 வீதம் உணவு ஊட்டு செலவினமாகவும் அரசு வழங்குகிறது.
இங்கு பயிலும் மாணவர்கள் சுற்றுலாத்துறை சார்பில் கல்வி சுற்றுலாவுக்கும் அழைத்து செல்லப்படுவதாகவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசினார்.விழாவில் மாணவ,மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.வெற்றிச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பொ.வள்ளி வரவேற்று பேசினார்.
விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், விடுதி பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments