பரந்தூர் புதிய விமான நிலைய அமைவிடத்தில் நிலங்களை கணக்கெடுக்கும் பணி - அதிகாரிகளை முற்றுகையிட்ட நெல்வாய் கிராம பொதுமக்கள்
காஞ்சிபுரம்,நவ.5:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னைக்கு அடுத்தபடியாக 2 வதாக பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய,மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான நிலைய அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைநிலங்கள், குடியிருப்புகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் எனக் கூறி இதுவரை 833 நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கிராம ம க்களின் போராட்டத்தை, எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியினை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விமான நிலையம் அமையவுள்ள பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், கிராம மக்களின் எண்ணிக்கை மற்றும் வாழ்வாதார நிலை ஆகியனவற்றை கணக்கெடுத்து ஆவணமாக்கும் பணியினை செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நெல்வாய் கிராமத்திற்கு வந்தனர்.
அதிகாரிகள் கணக்கெடுப்பு வந்திருப்பதை அறிந்த 144 தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்வாய் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தங்கள் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு வழங்க மாட்டோம் எனவும் கூறி வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் பேச்சுக்கு சமாதானம் அடையாமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
தகவலறிந்து காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ஆஷிக் அலி சம்பவ இடத்துக்கு வந்து நெல்வாய் கிராமத்தினருடன் சமாதானமாக பேசினார்.
கிராமத்தினர் சமாதானம் அடையாமல் முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியதால் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸார் அக்கிராமத்தை சேர்ந்த சுரேஷ், குணசேகரன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து பேருந்தில் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் நெல்வயல் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது.

No comments
Thank you for your comments