Breaking News

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வார விழா தொடக்கம்

காஞ்சிபுரம், நவ.14:

காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நவ.14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டுறவு வார விழாவை கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ கொடியேற்றி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.


கூட்டுறவு வார விழா நவம்பர் 14 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி வரும் 20 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இவ்விழாவை தொடக்கி வைக்கும் விதமாக கூட்டுறவு சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தலைமையேற்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர் ர.சிவக்குமார், துணைப்பதிவாளர்கள் கி.மணி, து.அசோக்ராஜ்,கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் சீ.மங்கை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைவரும் இணைந்து கூட்டுறவு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பின்னர் வனத்துறையுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

அரசு காதுகேளாதோர் பள்ளியை சேர்ந்த 24 மாணவர்கள் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டனர்.5 கி.மீ.தொலைவிலான தொடர் ஓட்டமும் நடைபெற்றது.

இன்று 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு கேடயம் வழங்குவதுடன் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

தொடக்க விழாவில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் செயலாளர் ரமேஷ்குமார் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சியாளர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments