மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்
கலைத் திருவிழா போட்டிகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு, தெரிவித்ததாவது:
2024-25 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பினை தொடர்ந்து 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் கலை திறனை வெளிப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 –ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கலை திருவிழா போட்டிகள் நடைபெறுகிறது.
மேற்கண்ட அறிவிப்பின்படி 2022-23 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்கள் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள் கலையரங்க செயல்பாடுகள் மூலம் வழங்கப்பட்டு 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி அளவிலும், வட்டாரம் அளவிலும், மாவட்டம் அளவிலும் மற்றும் மாநில அளவிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாநில அளவில் “கலையரசன்,’ மற்றும் “கலையரசி” என்ற பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பிடம்பெற்ற மாணவர்கள் வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து 2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாநில அளவில் கலையரசன் மற்றும் கலையரசி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளார்கள்.
சென்ற ஆண்டு நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் பள்ளி அளவில் 45380 மாணவர்களும், வட்டார அளவில் 11391 மாணவர்களும் மாவட்ட அளவில் 2726 மாணவர்களும், மாநில அளவில் 411 மாணவர்களும் பங்குபெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருவி இசை, கோலாட்டம், வில்லுப்பாட்டு தெருக்கூத்து, மற்றும் நடனம் ஆகிய போட்டிகளில் மாநில அளவில் முதலிடத்திலும் கோண கொம்பு, கருவி இசை- காற்று கருவி, பிற மாநில நடனம் (தனி), அழகு கையெழுத்து, ஆகிய போட்டிகளில் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார்கள்.
இந்த ஆண்டு 2024-2025, மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணரும் நடைமுறையில் உள்ள கலை மரபுகள் பற்றி அவர்களுக்கு கற்பிக்கவும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலை வடிவங்களில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தவும் கலைத்திருவிழா போட்டிகள் “சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு” என்ற மையக்கருத்தின் அடிப்படையில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி அளவிலும் வட்டார அளவிலும் நமது மாணவர்கள், தங்கள் திறமைகளை சிறப்புடன் வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே மாணவ/மாணவியர்கள் இந்த வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்தி கொண்டு, தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு குறித்து மாணவர்கள் அறிந்து எதிர்கால வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேற என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. வெ.வெற்றிச்செல்வி, உதவி திட்ட அலுவலர் திரு.வெங்கடேசன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் கலந்துக் கொண்டார்கள்.




No comments
Thank you for your comments